அமெரிக்கத் தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்-

unஇலங்கை தொடர்பில் அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று அமெரிக்கத் தீர்மானம் குறித்த விவாதம் இடம்பெற்றது. குறித்த தீர்மானத்திற்கு இன்று மேலும் 25 நாடுகள் இணை பங்காளராக இணைந்து கொண்டன. மேலும் அமெரிக்க தீர்மானத்தை நடைமுறைப்படுத்த ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவுடன் இணைந்து ஒத்துழைப்பதாகவும் இலங்கையில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களின் பாதுகாப்புக்கும் இலங்கை அரசு உறுதியளிப்பதாகவும் ஐ.நா.வின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநி ரவிநாத் ஆரியசிங்க இதன்போது தெரிவித்தார். இதேவேளை குறித்த தலைப்பில் சமர்பிக்கப்பட்ட நான்காவது தீர்மானம் இதுவெனவும் இந்தத் தீர்மானத்திற்கே இலங்கை இணை பங்காளராக இணைந்துள்ளதாகவும் இங்கு உரையாற்றிய பிரித்தானிய பிரதிநிதி தெரிவித்துள்ளார். இதுவே இலங்கை மற்றும் இந்த ஆணைக்குழுவின் உண்மையான வரலாற்று வளர்ச்சி எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை இங்கு உரையாற்றிய இந்தியப் பிரிதிநிதி, இலங்கை தமிழர்கள் சம உரிமையுடன் வாழ வலியுறுத்துறோம். போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வளிக்க இந்தியா ஆதரவளிக்கும், என்றார்.

காணாமற்போனோர் தொடர்பாக விசாரணைக்குழு நியமனம்-

missingயுத்த காலப்பகுதியில் காணாமற்போனவர்கள் தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையிலான விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. காணாமற்போனோர் தொடர்பில் சுமார் 16,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவரான முன்னாள் மேல்நீதிமன்ற நீதிபதி மெக்ஸ்வெல் பரணகம குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்தவர்கள் காணாமற்போனமை தொடர்பில் சுமார் 5600 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார். 1983 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையான காலப்பகுதி வரை காணாமற்போனோர் குறித்து முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவரான மெக்ஸ்வெல் பரணகம மேலும் தெரிவித்துள்ளார்.