சிறுவர்களை பாதுகாக்க விஷேட சாதனம்-
அண்மைய காலங்களில் சிறுவர்கள் முகங்கொடுத்த துயரமான சம்பவங்களை தொடர்ந்து, சிறுவர்களை பாதுகாக்க விஷேட தொலைபேசி சாதனம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். டெலிகொம், மொபிடல், டயலொக், ஐசிடி போன்ற வளர்ச்சியடையும் தொழில்நுட்பத்துடன் இணைந்து இந்த சாதனம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். மேலும் 3 இலக்கங்களைக் கொண்ட சிறுவர்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளும் வகையில் புதிய கருவி அறிமுகப்படுத்தப்படும். குறைந்த விலையில் கொள்வனவு செய்யக் கூடியதாகவும் இருக்கும். இதன்மூலம் சிறுவர்கள் அவசர சந்தர்ப்பங்களில் பெற்றோர்கள் மற்றும் பொலிஸாரை தொடர்புகொள்ள முடியும். சிறுவர்களை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ மேலும் கூறியுள்ளார்.
வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது-
நிலுவை சம்பளத்தைக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களுக்கு இதுவரை தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவில்லை. நிலுவை சம்பளத்தை வழங்குமாறு வலியுறுத்தி இரண்டு வாரங்களாக கடதாசி ஆலை ஊழியர்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடதாசி ஆலை ஊழியர்கள் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடதாசி ஆலையின் கட்டடமொன்றின் மீது ஏறி ஊழியர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். 2014 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான சம்பளம், இந்த வருடத்தின் ஜூலை மாத சம்பளத்தின் 30 வீதம் இந்த வருடத்தின் ஒகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களுக்கான சம்பளம் என்பன இதுவரை வழங்கப்படவில்லை என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். மின்சார கட்டணம் செலுத்தப்படாமையால் இந்த ஆண்டின் பெப்ரவரி 9ஆம் திகதி கடதாசி ஆலையின் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சார துண்டிக்கப்பட்டதை அடுத்து தொழிற்சாலை நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி ஐ.நாவிலிருந்து நாடு திரும்பினார்-
ஐக்கிய நாடுகளின் 70ஆவது பொதுச்சபைக் கூட்டத் தொடரில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டை வந்தடைந்துள்ளார். ஜனாதிபதியை வரவேற்கும் விதமாக பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் பெருந்திரளான மக்களும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கூடியிருந்தனர். கடந்த 30 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் 70ஆவது பொதுச்சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி உரையாற்றியிருந்தார். இதன்போது, நிலையான அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் ஆகிய இரட்டைக் காரணிகளை எட்டுவதே இலங்கை அரசாங்கத்தின் இலக்காகும் என அவர் தெரிவித்திருந்தார். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆகியோரும் ஜனாதிபதியுடன் ஐ.நா பொதுச்சபை கூட்டத் தொடரில் கலந்துகொண்டிருந்தனர்.
இலங்கையின் ஒருமைப்பாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது-பிரித்தானியா-
இலங்கை தொடர்பான மனித உரிமைகள் அறிக்கை ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டமையினால் இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்புக்கள் இல்லை என இலங்கையில் இருக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை மூலம் இலங்கையின் ஒருமைப்பாடு மற்றும் சுயாதீனத்தன்மை மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானிய உயர் ஸ்தானிகரின் கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது வழங்கிய ஊடகச் செவ்வியின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் அறிக்கைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியன்மூலம் செழிப்பான நாட்டை உருவாக்க வேண்டிய தேவை உள்ளதை இலங்கை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்டிருப்பதனால் எதிர்காலம் தொடர்பான நல்ல அறிகுறிகள் தென்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மரண தண்டனையை வலியுறுத்தி பிரேரணை நிறைவேற்றம்-
பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற பிரேரணை ஒன்று கண்டி மாநகர சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. சபையின் மாத இறுதிக் கூட்டத் தொடர் கடந்த 30ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போதே இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. நாட்டில் மிக வேகமாகப் பரவிவரும் பெண்கள் மீதான பாலியல் குற்றச்செயல் சிறுவர் சிறுமியர் மீதான பாலியல் துஷ்பிரயோகம் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்தல் போன்ற குற்றச் செயல்களை புரியும் சம்பவங்களில் நேரடியாக சம்பந்தப்பட்டு நீதிமன்றங்களால் குற்றவாளிகளாகக் காணப்படும் குற்றவாளிகளுக்கு கட்டாயமாக மரண தண்டனை விதித்து தூக்கிலிடப்பட வேண்டும் என்று பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சுமிந்த விக்ரமசிங்க (ஐ.தே.க) உறுப்பினர் உபாலி ஜயசேகர (ஐ.ம.சு.கூ) ஆகியோர் இந்த யோசனையை சமர்பித்து மனித கொலைக்காரர்களுக்கு கட்டாயமாக மரண தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் எனவே தூக்குத் தண்டனையை நிறைவேற்ற தூக்கு மரத்தை நிறுவ வேண்டும் என்றும் சபையில் வலியுறுத்தினார். இதன் பின்னர் இவ் யோசனைக்கான தீர்மானம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதுடன் இத் தீர்மான பிரதிகள் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.