அபிவிருத்திக்கு உலக நாடுகள் உதவ வேண்டும்-பிரதமர் ரணில்-

ranilகடந்த காலங்களில் கற்றுக் கொண்ட விடயங்களின் அடிப்படையில் எதிர்கால அபிவிருத்தியை அடைவதற்கு, இலங்கை உள்ளிட்ட தென்னாசிய நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உலக சமுகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஜப்பானின்- நியோதோ நகரில் நடைபெறும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இலங்கை உள்ளிட்ட நாடுகளில் ஜனநாயக மற்றும் நல்லாட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதற்கும் உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கியாத்தோ நகரில் உள்ள கியாத்தோ சர்வதேச மண்டபத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சிறுமி படுகொலை தொடர்பில் மேலும் ஒருவர் கைது-

arrest (30)கொட்டதெனியாவ 05 வயது சிறுமியை வன்கொடுமைக்குள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் நேற்றையதினம் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 72 மணிநேர தடுப்புக்காவலில் வைத்து பொலிஸ் விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபரை இன்று ஆஜர்படுத்தியபோது பதில் நீதிபதி பிரியன்தி லியனஆரச்சி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கைதுசெய்யப்பட்டவர் மேற்படி சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருக்கும் துனேஸ் பிரசாந்த என்கின்ற கொண்டையாவின் சகோதரர் என்று கூறப்படுகிறது. இதேவேளை இந்த கொலை தொடர்பில் ஏற்கனவே 17 வயதுடைய மாணவர் ஒருவரும் மற்றுமொரு குடும்பஸ்த்தரும் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 06 பேருக்கு மயக்கம்-

ertrtகிழக்கு மாகாணசபைக்கு முன்பாக மூன்றம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அம்பாறை மாவட்ட வேலையில்லா தமிழ்ப் பட்டதாரிகளில் 06 பேர் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, திருகோணமலை தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக அம்பாறை மாவட்ட வேலையில்லா தமிழ்ப் பட்டதாரிகள் அமைப்பின் செயலாளர் பி.தட்சாயன் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை (02) 04 பேரும் சனிக்கிழமை (03) 02 பேரும் மயக்கமடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கவேண்டும், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கு வேலை வழங்கவேண்டும், அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 30ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சரின் ஜனாஸா இன்று நல்லடக்கம்-

abdul katharமுன்னாள் அமைச்சர் அப்துல் காதரின் ஜனாஸா, இன்று மாலை 5 மணிக்கு கம்பளை நகர் பள்ளிவாயலில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. கடந்த சில வாரங்களாக சுகயீனமுற்றிருந்த இவர் கண்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி தனது 79 ஆவது வயதில் காலமானார். 1988 ஆம் ஆண்டு அரசியலில் பிரவேசித்த அப்துல் காதர், 1988 ஆம் ஆண்டு மாகாண சபை உருவாக்கப்பட்ட போது முதல் முஸ்லிம் மாகாண அமைச்சராக மத்திய மாகாண சபையில் பதவி வகித்தார். அதனைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டதுடன் பிரதியமைச்சராகவும் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். அவர் கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில்; கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

போர்க்குற்ற விசாரணையில் தமிழ் நீதிபதிகள்-சீ.பி.ஐ-

cpiஜெனீவா பிரேரணையின் அடிப்படையில் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்படவுள்ள தீர்ப்பாயத்தில் தமிழ் நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் கமியுனிச கட்சி இதனை வலியுறுத்தியுள்ளது. இந்த விடயத்தில் இந்திய மத்திய அரசாங்கம் தலையிட்டு, தமிழ் நீதிபதிகளை இடம்பெற செய்ய வேண்டும் என்று, அந்த கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்ளக பொறிமுறை அமுலாக்கப்படவுள்ளது. இதற்காக நியமிக்கப்படும் தீர்ப்பாயத்தில் பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகளும், வெளிநாட்டு நீதிபதிகளும் கட்டாயமாக உள்வாங்கப்படும் அதேநேரம், உள்நாட்டு நீதிபதிகளாக தமிழ் நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.