யாழ். நீதிமன்ற தாக்குதல் இருவருக்கு பிணை 18பேருக்கு விளக்கமறியல்-

courtsயாழ். நீதிமன்ற கட்டிட தொகுதியின்மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபர்களில் 18 பேரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி பொ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். கடந்த மே மாதம் 21 ஆம் திகதி யாழ். நகரப்பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் யாழ். நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற கலவரத்தின் போது, நீதிமன்ற கட்டிட தொகுதியின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், சிறைச்சாலை வாகனமும் தாக்கப்பட்டது.இந்த சம்பவத்தின் பின்னர் 130 இற்கும் அதிகமான இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன், ஏனைய சிலர் தொடர் விளக்கமறியலில் இருந்து வருகின்றார்கள். இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 20 நபர்களின் வழக்கு இன்று யாழ். நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த விசாரணையின் பின்னர் 2 நபர்களை தலா 5 லட்சம் ரூபா பெறுமதியான 5 ஆட்பிணையில் செல்ல அனுமதித்ததுடன், ஏனைய 18 நபர்களையும் எதிர்வரும் 20ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதேநேரம், கடந்த வழக்கில் பிணையில் செல்ல அனுமதித்த நபர் வழக்கிற்கு சமூகமளிக்காத காரணத்தினால், குறித்த நபருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்தும் யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.