சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதன் மூலமே குற்றச் செயல்களைத் தடுக்க முடியும்-சித்தார்த்தன் எம்.பி-

D.Sithadthanயுத்த காலத்தில் வடக்கில் பெண்கள் பாதுகாப்­பாக இருந்ததோடு நள்ளிரவிலும் கோவில் திரு­வி­ழாக்கள் முடிந்து வீடு திரும்பும் நிலை காணப்பட்­டது. ஆனால் இன்று பெண்கள் வீட்டி­லி­ருந்து வெளியே செல்­வ­தற்கே அஞ்­சு­கின்­றனர் எனத் தெரி­வித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. தர்ம­லிங்கம் சித்­தார்த்தன். சட்டம், ஒழுங்கு சீர்­கு­லைந்­துள்­ளதன் கார­ண­மா­கவே வடக்கு, கிழக்கு உட்­பட நாடு முழு­வதும் குற்றச் செயல்கள் அதி­க­ரித்­துள்­ளன என்றும் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற மரண தண்­டனை தொடர்­பான சபை ஒத்­தி­வைப்பு பிரே­ரணை விவா­தத்தில் உரை­யாற்றும் போதே சித்­தார்த்தன் எம்.பி. இவ்வாறு தெரி­வித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில், வடக்கு, கிழக்கில் இன்று சிறு­வர்கள் பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்டு கொலை செய்­யப்­ப­டு­வதும் குழுக்­க­ளாக இணைந்து வாள் வெட்­டுகள் இடம்­பெ­று­வதும் அதி­க­ரித்­துள்­ளன. வடக்கில் வித்­தியா என்ற மாணவி பாலியல் பலாத்­கா­ரத்­திற்கு உள்­ளாக்­கப்­பட்டு கொடூ­ர­மாக கொலை­செய்­யப்­பட்டார். அது இன்று தெற்­கிலும் பரவி விட்­டது. சேயா என்ற சிறுமி இதே­போன்று கொடூ­ர­மாக கொலை செய்­யப்­பட்­டுள்ளார். வடக்கில் யுத்த காலத்தில் கூட பெண்கள் அச்­ச­மின்றி நட­மா­டி­னார்கள்.ஆனால் இன்று யுத்­தமும் முடிந்து விட்­டது. பெண்கள் வீட்­டி­லி­ருந்து வெளியே வர அச்சப்படு­கின்­றனர். பெண்கள், சிறு­வர்­க­ளுக்கு எதி­ரான துஷ்­பி­ர­யோ­கங்­களும் கொலை­களும் அதி­க­ரித்­துள்­ளன. இதற்கு மரண தண்­டனை தீர்­வாக அமை­யப்­போ­வ­தில்லை. வடக்கில் குற்றச் செயல்­களை நிறுத்­து­வ­தற்கு நீதி­பதி இளஞ்­செ­ழியன் கடு­மை­யான தீர்ப்­புக்­களை வழங்­கு­கின்றார். இது பாராட்­டப்­பட வேண்­டிய விட­ய­மாகும். நீதி­பதி இளஞ்­செ­ழி­யனால் இதனை முன்­னெ­டுக்க முடி­யு­மானால் ஏன் ஏனை­ய­வர்­க­ளுக்கு முடி­யாது. வடக்கில் சட்டம் ஒழுங்கு சீர்­கு­லைந்­துள்­ளது. பொலிஸார் கடை­மை­களை சரி­வரச் செய்­வ­தில்லை. குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­பட்டு தண்­ட­னைகள் வழங்­கப்­ப­டு­வ­தில்லை.

அத்­தோடு மொழிப் பிரச்­சி­னையும் உள்­ளது. குற்றச் செயல்கள் தொடர்­பாக பொலி­ஸா­ருக்கு மொழி­பெ­யர்ப்பு செய்­ப­வர்கள் பிழை­யான விட­யங்­களை எடுத்துக் கூறு­கின்­றனர். சட்டம், ஒழுங்கு சீர்­கு­லைந்­துள்­ளது. இதனை பாது­காக்க நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும். யாழ்ப்­பா­ணத்தில் இன்று வாள் வெட்­டுக்கள் நடத்தும் கோஷ்­டி­களின் அட்­ட­காசம் அதி­க­ரித்­துள்­ளது. யுத்தம் முடிந்த பின்னர் க.பொ.த.(சா.த) படித்து விட்டும் பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லி­ருந்து வெளி­யே­றிய மாண­வர்­களும் தொழி­லில்­லாமல் சுற்றித் திரிகின்றனர். இவர்கள் திரைப்படங்கள் பார்த்துவிட்டு வாள் வெட்டுக்களில் ஈடுபடுகின்றனர். எனவே மரணதண்டனை மூலம் நாட்டில் குற்றச் செயல்களை தடுக்க முடியாது. சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதன் மூலமே குற்றச் செயல்களை தடுக்க முடியும் என்றார்.