வேலையில்லா பட்டதாரிகளின் உண்ணாவிரதம் தொடர்கிறது-

graduateமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் தம்மை நிரந்தர நியமனத்தில் உள்வாங்க கோரி காலவரையறையற்ற உண்ணாவிரத போராட்டத்தினை இன்று காலை ஆரம்பித்துள்ளனர். அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கிழக்கு மாகாணசபைக்கு முன்பான உண்ணாவிரத போராட்டம் நடாத்திவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளும் இவ்வாறான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் மட்டக்களப்பு காந்திப்பூங்காவில் ஒன்றுகூடிய பெருமளவான வேலையற்ற பட்டதாரிகள் இந்த உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர். கடந்த காலத்தில் கிழக்கு மாகாணசபை மற்றும் மத்திய அரசினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் இதுவரையில் நிறைவேற்றப்படாத நிலையில் இந்த உண்ணாவிரத போராட்டத்தினை நடாத்தவேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கின்றனர். 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் பட்டம் பெற்றுள்ள நூற்றுக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகள் இந்த போராட்டத்தில் குதித்துள்ளனர். நாங்கள் பல தடவைகள் பல்வேறு கோரிக்கைகள் மற்று போராட்டங்களை நடாத்தியபோதும் எமக்கான வேலை வாய்ப்பினை வழங்குவதற்கு மத்திய அரசும், மாகாணஅரசும் இழுத்தடிப்புச் செய்துவருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 1400 பட்டதாரிகள் உள்ளனர் அவர்கள் கடந்த பல வருடங்களாக வேலைவாய்ப்பின்றி மிகுந்த கஸ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர். மத்திய ,மாகாண அரசாங்கங்கள் தொடர்ந்தும் எமது கோரிக்கைகளை புறக்கணித்து வருகின்றனர்.35 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கவேண்டும், உடனடியாக மகாண முதலமைச்சர் மற்றும் மத்திய அரசாங்கம் என்பன தற்போதுள்ள வெற்றிடங்களுக்கு எமது பட்டதாரிகளை நியமிக்க வேண்டும் போன்ற பல கோரிக்கைகள் இதன்போது முன்வைக்கப்பட்டன. தமது நிலைமை தொடர்பில் இதுவரையில் மாகாண,மத்திய அரசாங்கங்கள் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாமை தொடர்பிலும் இங்கு பட்டதாரிகளினால் கவலை தெரிவிக்கப்பட்டது. தமக்கு நியமனம் வழங்கக்கோரி இரண்டு முறை ஆர்ப்பாட்டங்களை நடாத்தியபோதிலும் மகஜர்களை வழங்கியுள்ள நிலையிலும் தமக்கு இதுவரையில் எதுவித சாதனமான பதில்களும் வழங்கப்படவில்லை எனவும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டோர் “மத்திய அரசே,மாகாண அரசே பட்டதாரிகளுக்கு உடன் நியமனம் வழங்கு,ஆட்சிமாற்றம் எமக்கு ஏமாற்றமா,பட்டம்பெற்றது வெறும் பகட்டுக்கா?, கிழக்கு மாகாண போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு நியமனம் எப்போது?,நூறுநாள் வேலைத்திட்டத்தினை அரசாங்கம் மறந்துவிட்டதா?” போன்ற சுலோகங்கள் கொண்ட பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரையில் தமது உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் எனவும் இங்கு கருத்து தெரிவித்தவர்கள் தெரிவித்தனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்ட வேலையற்ற பட்டதாரிகள் சிலர் கைக்குழந்தைகளுடனும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.