விஸ்வமடு பாலியல் வழக்கு இராணுவத்தினர்க்கு கடூழிய சிறை-

jaffna courtsகிளிநொச்சி விசுவமடு பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் கூட்டு பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் துஸ்பிரயோக வழக்கில், நான்கு இராணுவத்தினருக்கு யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் அவர்கள் 30 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2010ம் ஆண்டு வன்னிப் பிரதேசத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போது, இராணுவத்தினரால், விசுவமடு பகுதியில் இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதுடன், 5 பிள்ளைகளின் தாயார் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் நான்கு இராணுவத்தினருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். விசுவமடு பிரதேச இராணுவ முகாமில் கடமையாற்றியிருந்த, குறித்த இராணுவ சிப்பாய்களுக்கு எதிராக இந்த வழக்கில் 5 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. வழக்கு விசாரணையின்போது, நான்காவது நபர் நீதிமன்றில் ஆஜராகவில்லை. தலைமறைவாகியிருந்தார். அவர் இல்லாமலேயே இந்த வழக்கு விசாரணை நடைபெற்று இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் முடிவில் 81 பக்கங்களைக் கொண்ட தனது தீர்ப்பை நீதிபதி இளஞ்செழியன் பகிரங்க நீதிமன்றத்தில் வாசித்தார். குற்றம் சுமத்தப்பட்டிருந்த நான்கு இராணுவ சிப்பாய்களும் விசாரணையில் குற்றவாளிகளாகக் காணப்பட்டிருப்பதாகத் தெரிவித்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் மொத்தமாக 30 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்குவதாக தனது தீர்ப்பில் அவர் தெரிவித்தார்.
இதன்போது தெளிவபடுத்தல் வழங்கிய நீதிபதி அவர்கள், மக்களையும் நாட்டையும் பாதுகாக்கச் சென்ற காவலர்களே குற்றம் புரிந்து இந்த வழக்கில் எதிரிகளாக நிறுத்தப்பட்டிருப்பவர்கள் இராணுவச் சிப்பாய்களாவர். இவர்கள் இந்தச் சம்பவம் நடைபெற்ற காலப்பகுதியில், கிளிநொச்சி விசுவமடு பிரதேசத்தில் நாட்டின் பாதுகாப்பையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் பாதுகாப்பு நடவடிக்கைக்காக, இராணுவ உத்தியோகத்தர்களாக கடமைக்காக அரசாங்கத்தினால் அனுப்பப்பட்டிருந்தார்கள். அவ்வாறாக தேசிய பாதுகாப்பு கடமைக்காக அனுப்பப்பட்டிருந்த போதே, இவர்கள் தங்களுடைய இராணுவ முகாமில் இருந்து வெளியேறிச் சென்று, கூட்டுப்பாலியல் மற்றும் பாலியல் துஸ்பிரயோகக் குற்றச்செயலைப் புரிந்திருக்கின்றார்கள்.

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் நாட்டின் கோர யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அனைத்தையும் இழந்து இராமநாதன் இடம்பெயர் அகதி முகாமில் தஞ்சமடைந்திருந்துவிட்டு, அரசாங்கமும், இராணுவத்தினரும் வழங்கிய மீள்குடியேற்றத்திற்கான வாக்குறுதியை அடுத்து, இந்தப் பெண்கள் தமது செர்நத ஊரான விசுவமடுவுக்குத் திரும்பிச் சென்று தற்காலிகக் கொட்டில் அமைத்து, அதில் தங்கியிருந்து தங்களுடைய காணிகளைத் துப்பரவு செய்வதில் ஈடுபட்டிருந்த வேளையில் இரவு 12 மணிக்கு அவர்கள் தங்கியிருந்த வீட்டினுள்ளே புகுந்து, இந்தக் குற்றச் செயலைப் புரிந்திருக்கின்றார்கள்.

கோர யுத்தத்தில் பாதுகாக்கப்பட்ட மானம் யுத்தம் இல்லாத வேளை சூறையாடப்பட்டது.இந்தச் செயலின்மூலம், யுத்தம் நடைபெற்றபோது, காப்பாற்றப்பட்டிருந்த அந்தப் பெண்களின் கற்பையும் மானத்தையும் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், இந்த 4 இராணுவ சிப்பாய்களும் சூறையாடி இருக்கின்றார்கள். கோர யுத்தத்தில் பாதுகாக்கப்பட்ட மானம் 2010 ஜுன் 6 ஆம் திகதி யுத்தம் இல்லாத சூழ்நிலையில் எதிரிகளான இராணுவ சிப்பாய்களினால் பறிக்கப்பட்டிருப்பது பாரிய குற்றச் செயலாகும்.

பொது மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய தமது அரச கடமையாகிய பாதுகாப்பை வழங்காமல் இரண்டு தாய்மார்கள் மீது கூட்டுப் பாலியல் வல்லறவு மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் செய்தது என்பது தண்டனைக்குரிய குற்றமாகும். அது மட்டுமல்லாமல், இந்த நாட்டு இராணுவத்தினரின் நற்பெயரைக் கெடுத்த செயலாகும். எனவே, இலங்கை இராணுவத்தின் கௌரவத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இராணுவத்தின் பாலியல் வல்லுறவு குற்றம் என்பது சர்வதேச குற்றம், அத்துடன் அது ஒரு போர்க் குற்றம், மனித நேயத்திற்கு எதிரான குற்றம் என ஐ.நா யுத்த குற்ற நீதிமன்ற சட்டங்களிலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டங்களிலும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டபோது யாழ். மேல் நீதிமன்றம் பொதுமக்களினால் நிறைந்து வழிந்தது. தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து, எதிரிகள் நான்கு பேரும் உடனடியாக, பாதுகாப்பாக சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றக் கட்டிடத்தின் முதலாம் மாடியில் அதிரடிப்படை பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். நீதிபதி இளஞ்செழியனுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.