த.வி.கூ செயலாளர் நாயகம் பிரதமருக்கு கடிதம்-
அன்புள்ள பிரதம மந்திரி அவர்களே!
இனப்பிரச்சனை சம்பந்தமாக அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை
இனப்பிரச்சனை சம்பந்தமாக விரைவில் நடவடிக்கை எடுக்கவிருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். ஜப்பானிய பாராளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய உரையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் வேறு அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுவிட்டதெனவும் விரைவில் தீர்வு காணப்படும் என்று கூறியுள்ளீர்கள். உள்ளுர் பத்திரிகைகளில் பல்வேறு இடங்களில் நீங்கள் ஆற்றிய உரைகளில் “பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவிருப்பதாக நீங்கள் கூறிவருவது எங்களுக்கு சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. நீங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடவிருப்பவர்களோடு, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத தமிழ் பேசும் மக்களின் கட்சிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என மிகவும் விநயமாக கேட்டுக் கொள்கின்றேன். ஒரேயொரு கட்சியுடன் மட்டும் பேசுவதால் அது உரிய பலனை தராது பாதிப்பையே ஏற்படுத்தும். கடந்த காலங்களில் இனப்பிரச்சினை சம்பந்தமாக குறிப்பிட்ட சில அமைப்புகளுடன் மட்டும் நடந்த பேச்சுவார்த்தைகள் அத்தனையும் தோல்விகளிலேயே முடிந்தன. அதன் விளைவுகளால் எமது மக்கள் இன்றுவரை சொல்லொணாத துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.ஒரு குறிப்பிட்ட குழுவினரை திருப்திபடுத்துவதற்காக நடாத்தப்படுகின்ற இவ்வாறன பேச்சுவார்த்தைகள் ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் விடிவை பெற்றுத்தராது. எனவே கடந்த கால அனுபவங்களை கருத்திற்கொண்டு அந்தத் தவறு மீண்டும் நடக்காதவாறு அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு விசேட குழுவை உருவாக்கி பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டும். அரசியலில் பலமான கட்சி பலமிழந்து போவதும், பலமிழந்து போன கட்சி மீண்டும் பலமடைவதும் மிகச் சர்வசாதாரணமான விடயம் என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதல்ல.
தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு மிதவாத கட்சி. கடந்த காலத்தில் அக்கட்சி 18 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்ததோடு எதிர்கட்சி தலைவரை தெரிவு செய்யும் பலமும் அதற்கிருந்தது. இன்று அந்த நிலைமையில்லை. 2004ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியில் 14 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்திற்கும், பிரதம மந்திரி பதவிக்கும் இன்னும் நான்கு ஆண்டுகள் எஞ்சியிருந்த போதும் அது கலைக்கப்பட்டமைக்கு நியாயப்படுத்தக்கூடிய வலுவான காரணங்கள் எதுவும் இருக்கவில்லை. 2004ம் ஆண்டு எவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதிநிதித்துவம் முற்றாக அழிக்கப்பட்டது என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன். உங்களுடைய தேசிய அரசாங்கத்தில் ஏனைய தமிழ் கட்சிகளின் நிலைப்பாடு என்னவென்பதை அறிய விரும்புகிறேன்.
வீ.ஆனந்தசங்கரி செயலாளர் நாயகம்- த.வி.கூ