லசந்த படுகொலை குறித்து தகவல் தருமாறு கோரிக்கை-
சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த படுகொலைச் சம்பவம் தொடர்பில் தகவல்களை பெற்றுகொள்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களம் மக்களிடமிருந்து உதவியை எதிர்பார்த்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஏதாவது தகவல் தெரியுமாயின் 071-8591753 மற்றும் 071-8591770 ஆகிய அலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது. சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, தெஹிவளை அத்திடிய பிரதேசத்தில் வைத்து 2009ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதியன்று படுகொலை செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பா.உ ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் இருவர் கைது-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலைசெய்யப்பட்டமை தொடர்பாக மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியன் முன்னாள் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர்(எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா) மற்றும் கஜன் மாமா (ரெங்கசாமி கனகநாயகம்) ஆகிய இருவரும் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி சம்பவம் தொடர்பில் இருவர் மட்டக்களப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். 2005ம் ஆண்டு டிசம்பர் 25ம் திகதி மட்டக்களப்பிலுள்ள தேவாலயம் ஒன்றில் வைத்து ஜோசப் பரராஜசிங்கம் கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட இருவரையும் காவலில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலப்பு நீதிமன்றம் செயற்படுத்தப்படாது-ராஜித சேனாரத்ன-
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து கலப்பு நீதிமன்றம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என மீண்டும் நினைவூட்டுவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். தேசிய நீதிமன்ற அமைப்பில் இணைக்கப்பட்ட தேசியப் பொறிமுறை மூலமே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டிலேயே அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இவ்வாறு தெரிழவித்துள்ளார்.
கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் குறித்த மனு நிராகரிப்பு-
கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த 11 உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் தெரிவுசெய்தமையை செல்லுபடியற்றதாக ஆக்குமாறு கோரிய மனு, உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இலங்கைக் கொம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டிவ் குணசேகரவால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சபாநாயகரால் தேசியப் பட்டியலில் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், நீதிமன்றத்தில் இது குறித்து விசாரணை செய்ய முடியாது என, பிரதம நீதியரசர் கே.சிறீபவன் உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.
தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை ஆரம்பம்-பிரதமர் ரணில்-
இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் பொருட்டு, இலங்கை அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய கட்சிகளுடன் முறைசாரா கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், மனித உரிமைகளை உறுதிப்படுத்துதல், நிறுவனக் கட்டமைப்பை பலப்படுத்துதல் என்பன அரசியல் நோக்கங்களின் பிரதானமாக காணப்படுகின்றது. எனினும், தேசிய ஒற்றுமை மற்றும் மத, இனப் பிரச்சினை தொடர்பாக விடயங்களுக்கு அரசியல் தீர்வுகளை தேடுவதே முக்கிய விடயமாக இனங்காணப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நலன்புரி நிலையங்களின் அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்கீடு-
நலன்புரி நிலையங்களின் அடிப்படை வசதிகளுக்காக 25 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்றையதினம் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, தோட்டப்புறங்கள் இன்று பராமரிக்கப்படாதுள்ளதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார். அத்துடன் யாழ்ப்பாண குடாநாட்டில் விளைகின்ற மரக்கறிகளுக்கான உரிய சந்தை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவாநந்தா கோரிக்கை விடுத்துள்ளார். வட மாகாணத்தில் உரிய காலப்பகுதியினுள் பசளைகள் விநியோகிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கோரியுள்ளார்
யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு-
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேசத்திலுள்ள சட்டத்தரணி ஒருவரது வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து சட்டத்தரணிகள் இன்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். யாழ். மாவட்டத்திலுள்ள ஐந்து நீதிமன்றங்களை சேர்ந்த சட்டத்தரணிகளினால் இந்த பணிப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது. பருத்தித்துறை – கற்கோவளன் பகுதியில் இரண்டு தரப்பினர் கை கலப்பில் ஈடுபட்டதுடன், அவர்களில் ஒரு சாரார் சட்டத்தரணியின் வீட்டிற்குள் நுழைந்து வீட்டிலுள்ளவர்களை அச்சுறுத்தியுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பருத்தித்துறை, மல்லாகம், ஊர்காவற்றுறை, சங்கானை, யாழ்ப்பாணம் நீதிமன்றங்களைச் சேர்ந்த சட்டத்தரணிகள் புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர். இதனால் நீதிமன்ற நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன.