அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்-வீ.ஆனந்தசங்கரி-

ANANDASANGAREEபல வருடங்களாக சிறையில் வாடும் அரசியல் கைதிகள் அனைவரும் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அவர்களில் அநேகருடைய குடும்பங்கள் படும் இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல. இலங்கையில் பொதுமன்னிப்பு என்பது புதிய விடயம் அல்ல. ஏற்கனவே இலங்கை இந்திய ஒப்பந்த காலத்தில் பலர் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட்டனர். முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியை தாக்கியவர் கூட பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட்டார். பல வருடங்கள் சிறையில் விசாரணைகள் எதுவுமின்றி இருக்கின்றார்கள். ஒரு சிலருக்கு இப்போது விசாரணைகள் நடைபெற்று தற்போது குற்றவாளிகளென இனங்காணப்பட்டு தண்டனை பெற்றுள்ளார்கள்.  ஒட்டு மொத்தமாக பார்க்குமிடத்து ஒரு குற்றத்திற்கு எத்தனை வருட தண்டனையோ அதைவிட கூடுதலான வருடங்கள் சிறையில் விசாரணைக்கைதியாக இருந்து வருகின்றனர். இவற்றையெல்லாம் கணக்கிலெடுத்து தற்போது நாட்டில் நடப்பது நல்லாட்சிதான் என்று மக்கள் எண்ண வேண்டுமானால் இவர்கள் அத்தனை பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும். ஏற்கனவே இந்த நாட்டில் நல்லாட்சி ஒன்று நடந்திருந்தால் எமது மக்கள் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியும் இருக்கமாட்டார்கள். அவர்கள் சிறையில் வாட வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்காது. அப்படி பார்த்தால் ஒரு வகையில் இதற்கு முன்னர் ஆட்சிக்கு வந்த அரசுகளும் குற்றவாளிகள்தான். எம்மையும், எமது இளைஞர்களையும் போராட தூண்டியதே அவர்களின ஆட்சி அதிகாரங்கள்தான். அவர்கள் நல்லாட்சி செய்திருந்தால் எமது மக்களும் எதுவித பிரச்சினைகளுமின்றி வளமாக வாழ்ந்திருப்பார்கள். எனவே இதில் யார் குற்றவாளி என்பதல்ல தற்போதுள்ள பிரச்சினை. ஏதோவொரு காரணத்திற்காக தவறாக வழிநடாத்தப்பட்டு இன்று குற்றவாளிகள் என முத்திரை குத்தப்பட்டு சிறையில் வாடுபவர்கள் அத்தனைபேரும் அப்பாவிகள். அதுமட்டுமல்ல தவறாக வழிகாட்டியவர்கள் எல்லாம் இன்று வெளியில் சுகபோகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவர்களால் வழி நடத்தப்பட்டவர்கள் சிறையில் வாடுவது ஏற்றுக்கொள்ள முடியாததொன்று. எனவே அவர்கள் அத்தனை பேருக்கும் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். பாராதூரமான குற்றவாளிகள் பலர் பொதுமன்னிப்புடன் கூடிய விடுதலை செய்யப்படலாம் என்றால் ஏன் இவர்கள் விடுதலை செய்யப்படக்கூடாது என பொது மக்கள் கேட்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.