மட்டக்களப்பு பட்டதாரிகளின் உண்ணாவிரதம் முடிவு-
மட்டக்களப்பு காந்திப் பூங்காவுக்கு அருகில் கடந்த மூன்று தினங்களாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. நேற்று முன்தினம் காலை தொடக்கம் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப்பூங்காவுக்கு முன்னாள் அரச நியமனத்தை வழங்குமாறு கோரி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்து 3ஆவது நாளாக இன்றும் மேற்கொண்டனர். கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் சற்று முன்னர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து கலந்துரையாடிய பின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது. இதன்போது உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் தமது நிலைப்பாட்டை எடுத்துக் கூறியதுடன் நான்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றையும் கையளித்தனர். இதனையடுத்து கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் எதிர்வரும் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 31க்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகளுக்கு கிழக்கு மாகாண சபையினால் வேலை வாய்ப்பினை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி வழங்கினார். இதன்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் வழங்கிய உறுதிமொழிக்கு அமைவாக வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்காவிட்டால் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வேலையற்ற பட்டதாரிகளையும் ஒன்றிணைத்துக் கொண்டு கிழக்கு மாகாண சபைக்கு முன்னாள் உண்ணாவிரதத்தினை மேற்கொள்வதுடன் கிழக்கு மாகாண சபையையும் முற்றுகையிடுவோம் என வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் சார்பில் உறுப்பினர் ஒருவர் முதலமைச்சரிடம் தெரிவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.