இலங்கைக்கான நிதி உதவி அதிகரிக்கப்படும்-உலக வங்கி-
இலங்கைக்கு வழங்கும் நிதி உதவியை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக உலகவங்கி அறிவித்துள்ளது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடனான சந்திப்பில், உலகவங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் அதிகாரிகள் இதனைக் குறிப்பிட்டதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருவின் தலைநகர் லீமாவில் நேற்றுமுன்தினம் உலகவங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த மாநாடு ஆரம்பமாவதற்கு முன்பாக அவற்றின் அதிகாரிகளை சந்தித்து நிதி அமைச்சர் கலந்துரையாடினார். இலங்கையின் பொருளாதாரம், ஏற்றுமதி, தொழில் முயற்சி ஆகியவற்றை மேம்படுத்தவும், வர்த்தக மற்றும் முதலீட்டுத் துறைகளை ஊக்குவிக்கவும் அதிகநிதி உதவியை வழங்குவதற்கு இதன் போது உலக வங்கியின் அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடை யிலான புரிந்துணர்வு வலுப் பெற்றுள்ளதாகவும் அது சிறந்ததொரு முன்னேற்றமாகும் எனவும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. 188 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் ஆரம்பமான இந்த மாநாட்டில் சர்வதேச பொருளாதாரம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படும். இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி வழிமுறைகள் தொடர்பில் இந்த மாநாட்டில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உரையாற்றவுள்ளார் என அவ் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள் கௌரவிப்பு-
கடந்த 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களான செல்வி. யெநாதன் யெனந்தினி செல்வி. தவராசா கிரிசிகா செல்வி. சாந்தலிங்கம் ரேனுஜா மற்றும் செல்வி. சூரியகாந்தன் சௌமியா ஆகியோரை கௌரவிக்கும் முகமாகவும், கல்வியினை தொடர்ந்தும் ஊக்குவிக்கும் முகமாகவும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத் தலைமைச் செயலகத்தில் வைத்து வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் நான்கு புதிய துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கபட்டுள்ளன. இவை வட்டு இந்து வாலிபர் சங்க போசகரும், அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அதிபருமான திரு. ந.சபாரட்ணசிங்கி மற்றும் சமூக ஆர்வலர் திரு. ந.சபாநாதன் ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதற்கான நிதி அன்பளிப்பினை வட்டு இந்து வாலிபர் சங்க கனடாக் கிளை வழங்கியிருந்தது. ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வட்டு இந்து வாலிபர் சங்கம் சார்பில் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)