அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அடையாள உண்ணாவிரதம்-

unnavirathamவடமாகாண இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்று நல்லூர் ஆலய முன்றலில் இன்றுகாலை 8மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது. இதில் அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் யாழ் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம், வடமாகாணசபை உறுப்பினர்களான சுகிர்தன், கஜதீபன், பரஞ்சோதி, அஸ்மின், மற்றும் எதிர்க்கட்சித் தலைவரான தவராசா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நேற்றுமுதல் சாகும்வரையான உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தமது விடுதலையை வலியுறுத்தியே இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அரசியல் கைதிகளின் விடுதலை சம்மந்தமான உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக 14 சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்போது அரசியல்கைதிகளின் பிரச்சினை குறித்த தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முகத்தை மறைக்கும் தலைக்கவசத்திற்கு தடையுத்தரவு-

helmedமோட்டார் சைக்கிள் சாரதிகள் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிய பொலிஸார் விதித்த தடைக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இரு மோட்டார் சைக்கிள் சாரதிகள் தாக்கல் செய்த மனுமீதான விசாரணைகளையடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இதனையடுத்து இன்று குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, புதிய ஒழுக்கு விதிகளின் படி, பாதுகாப்பான தலைக்கவசங்களை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குறிப்பிட்டார். இதன்படி விடயங்களை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை நவம்பர் 2ம் திகதி வரை நீடிப்பதாக அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சிவநேசத்துரை சந்திரகாந்தன் தடுத்து வைப்பு-

pillaiyanதமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்காக சென்றிருந்த வேளையில் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டிருந்தார். அவரை நாளைவரை தடுத்து வைத்து விசாரணை செய்ய, குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அனுமதி இருப்பதாக, காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாளை அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில், அவரிடம் விசாரணை செய்யும் அதிகாரிகளே தீர்மானிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள இரு சந்தேகநபர்களும் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். கடந்த 2005ம் ஆண்டு டிசம்பர் 25ம் திகதி மட்டக்களப்பு சாந்தமேரி தேவாலயத்தில் வைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வித்தியா கொலை விசாரணையைத் துரிதப்படுத்துமாறு உத்தரவு-

jaffna courtsயாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை தொடர்பிலான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு ஊர்காவற்துறை நீதவான் எஸ்.லெனின் குமார் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். வழக்கு இன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவி வித்தியா வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான மரபணு அறிக்கைகள் இதுவரை கிடைக்கவில்லை என குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று நீதிமன்றத்தில் அறிவித்திருந்தனர். இன்றைய வழக்கு விசாரணையை சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதம மன்றாடியார் குமாரரட்ண மேற்பார்வை செய்துள்ளார் இதேவேளை, மாணவி வித்தியா கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சாட்சியாளர் ஒருவர் நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை பதிவு செய்யப்பட்ட இந்த வாக்குமூலம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களும் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது அவர்களை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பொதுபலசேனா பொதுச்செயலர் கைது-

gnanasaraபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளார். புனித குரானுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியமை மற்றும் ஜாதிக பலசேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் அத்துமீறி நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் ஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தது. அது குறித்த வழக்கு விசாரணைகளுக்காக நேற்று அவர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாமையால் கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த நிலையில் இவர்கள் இன்றையதினம் கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜராகியுள்ளனர். இதேவேளை ஞானசார தேரர் சரணடைந்ததை அடுத்து அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீளப்பெறப்பட்டுள்ளது.

விசாரணைகள் முடியும்வரை கப்பலை விடுவிக்க வேண்டாம் என பணிப்பு-

evangardஎவன்காட் கப்பல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் நிறைவடையும் வரை அதனை விடுவிக்க வேண்டாம் என, பாதுகாப்பு அமைச்சு கடற்படையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளது. அண்மையில் இலங்கை கடற்பரப்புக்குள் எவன்காட் கப்பல் ஒன்று பிரவேசித்தது. அதில் இருந்த கேப்டன் வழங்கிய தவறாக தகவல்களையடுத்து கடற்படையினரால் குறித்த கப்பல் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பில் கடற்படையினரால் ஆரம்ப கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அது குறித்த அறிக்கை தற்போது பாதுகாப்பு அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி இக்கப்பல் தொடர்பில் மூவரடங்கிய குழுமூலம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹேட்டிஆராச்சி கூறியுள்ளார்.

முன்னாள் அமைசச்ர் கே. வேலாயுதம் காலமானார்-

 velayuthamமுன்னாள் பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சரும் பதுளை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியுமான கே.வேலாயுதம் தனது 65ஆவது வயதில் காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி இன்று செவ்வாய்க்கிழமை மாலை காமாகியுள்ளார்.