விழிநீர் அஞ்சலி- அமரர் டேவிட் ஐயாவுக்கு

Captureடேவிட் ஐயா என கழக தோழர்களாலும் காந்தீய தொண்டர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்ட சொலமன் அருளானந்தம் டேவிட் (டேவிட் ஐயா) அவர்கள் 11.10.2015 ஞாயிற்றுக்கிழமை இயற்கை எய்தினார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

யாழ். கரம்பொன் கிழக்கு, ஊர்காவற்றுறையை பிறப்பிடமாகக் கொண்டிருந்த டேவிட் ஐயா அவர்கள் நீண்ட காலமாக தமிழகத்தில் வசித்ததன் பின்னர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் நோய்வாய்பட்டநிலையில் தனது உறவினருடன் இல, 33 மகாத்மா வீதி, ஆனந்தபுரம் கிளிநொச்சியில் வசித்துவந்தார்.இலங்கையில் அதிகூடிய தகுதிவாய்ந்த கட்டிடக் கலைஞராக அந்தக் காலத்தில் திகழ்ந்த சொலமன் அருளானந்தம் டேவிட் ஐயா அவர்கள் இங்கிலாந்தின் லிவர்பூல் நகரின் சிரேஸ்ட கட்டிடக் கலைஞராகவும், பின்னர் கென்யாவின் மொம்பாசா நகரின் பிரதம கட்டிடக் கலைஞராகவும் பணியாற்றியவர்.

1979களின் ஆரம்ப காலத்தில் டாக்டர் ராஜசுந்தரம், சந்ததியார், சுந்தரம்(சிவசண்முகமூர்த்தி) மற்றும் யோதீஸ்வரன்(கண்ணன்) ஆகியோருடன் இணைந்து வன்முறையால் பாதிக்கப்பட்ட மலையக மக்களை வடக்கு கிழக்கில் குடியேற்றுவதை பிரதான நோக்கமாகக் கொண்டு காந்தீயம் என்ற அமைப்பினை உருவாக்கி அதன் தலைவராக இருந்தார். பின்னர் இலங்கையின் இன ஒடுக்குதல்களுக்கும், இன ரீதியான வன்முறைகளுக்கும் எதிராக காந்தீய வழியில் தீவிரமாக செயற்பட்டார்.

1983 ஏப்ரல் மாதத்தில் டேவிட் ஐயா மற்றும் காந்தீயத்தின் செயலாளராக இருந்த டாக்டர் ராஜசுந்தரம் ஆகியோர் உமாமகேஸ்வரன் மற்றும் சந்ததியார் ஆகியோருடன் கொண்டிருந்த நெருங்கிய தொடர்பு காரணமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இலங்கை இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு பலத்த சித்திரவதைகளுக்கு உள்ளாகி வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

1983 ஜூலையில் இடம்பெற்ற வெலிக்கடைப் படுகொலையின்போது டாக்டர் ராஜசுந்தரம் அவர்கள் உட்பட 52பேர் சிறையில் இருந்த சிங்களக் காடையர்களால் கொலைசெய்யப்பட்டபோது மயிரிழையில் உயிர் தப்பியவர்களுள் டேவிட் ஐயாவும் ஒருவர். அதன் பின்னர் 1983 செப்டம்பர் மாதம் வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த மட்டக்களப்பு சிறையுடைப்பில் தப்பி தமிழகம் சென்றார்.

இக்காலப் பகுதியில் புளொட் அமைப்பின் உத்தியோகபூர்வ ஆங்கிலப் பத்திரிகைகளான PLOT-Bulletin மற்றும் மாத சஞ்சிகையான SPARK ஆகியவற்றின் ஆசிரியர் குழுவில் முக்கிய பங்காற்றி பல முக்கிய அரசியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதிவந்தார். அதேபோல் புளொட் அமைப்பின் தமிழீழத்தின் குரல் (Voice of Tamil Eelam – VOTE) வானொலி சேவையின் ஆங்கிலப் பிரிவிலும் தனது முழுமையான பங்களிப்பை வழங்கினார்.

011983இன் இறுதிப் பகுதியில் அன்றைய மொறீசியஸ் பிரதமருடனான பேச்சுவார்த்தைக்கு புளொட்டின் செயலதிபர் உமாமகேஸ்வரன் அவர்கள் சென்றிருந்தபோது அவருடன் டேவிட் ஐயா மற்றும் சித்தார்த்தன் அவர்களும்; உடனிருந்து அந்நாட்டின் செங்கம்பள வரவேற்பைப் பெற்றிருந்தனர்.

பின்னர் 1986இல் வறிய மற்றும் அகதி மக்களுக்கு தனி மனிதராக தன்னாலான சேவைகளை தமிழ் நாட்டிலிருந்து ஆற்றிவந்தார். பின்னர், 2015 ஜூலை மாதம் இலங்கை திரும்பி கிளிநொச்சியில் தனது உறவினர்களுடன் தங்கியிருந்தபோது சுகயீனமுற்று இன்று இயற்கை எய்தினார்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினர் உறவினர் மற்றும் நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு, எமது ஆழ்ந்த அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.

plote

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

குறிப்பு:
அன்னாரின் பூதவுடல் இல:33, மகாத்மா வீதி, ஆனந்தபுரம், கிளிநொச்சியில் அமைந்துள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 14.10.2015 புதன்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் இல 88, மகாத்மா வீதி, ஆனந்தபுரத்தில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகளும், அஞ்சலிக் கூட்டமும் இடம்பெற்று பிற்பகல் 2.00மணியளவில் கிளிநொச்சி ஏ9 வீதி பழைய ஆஸ்பத்திரிக்கு அருகாமையில் அமைந்துள்ள புனித திரேசா தேவாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பிற்பகல் 3.00மணியளவில் விசேட ஆராதனைகள் இடம்பெற்று திருநகர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
தொடர்புகளுக்கு.- டானியல் – 0778317536

 01 D1 D2