மீரியபெத்தை மண்சரிவின் ஒருவருட பூர்த்தி-

meeriyabeddaபதுளை, மீரியபெத்தை மண் சரிவில் பலியான 37 பேரினது ஆத்ம சாந்திக்காக ஒரு வருட திதி நிகழ்வுகள், பூணாகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் எதிர்வரும் 29ஆம் திகதி இந்து ஆகம விதிப்படி நடைபெறவுள்ளன. பூணாகலை தமிழ் மகா வித்தியாலய வளவில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆத்ம சாந்திக்கான பூஜைகள் இடம்பெறவுள்ளதுடன், மலர் அஞ்சலிகளும் இடம்பெறும். அத்துடன், மீரியபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்டு மாக்கத்தை தேயிலைத் தொழிற்சாலை நலன்புரி நிலையத்தில் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டிருக்கும் 75 குடும்பங்களைச் சேர்ந்த 320 பேருக்கும் அன்னதானம் வழங்கப்படும். இம்மண்சரிவில் பெற்றோரை இழந்த நிலையில் பூணாகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் மாணவர்கள் மூவர் மீது கூடிய கவனம் எடுக்கப்படவுள்ளது. ஹல்துமுல்லை கருவேற்காடுபதி ஸ்ரீதேவி கருமாரியம்மன் தேவஸ்தான பிரதமகுரு பிரம்மஸ்ரீ பாலமூர்த்தீஸ்வரக் குருக்கள் ஆத்ம சாந்தி பூஜை நிகழ்வுகளை நடத்தி வைப்பார். மேற்படி நிகழ்வுகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பூணாகலை தமிழ் மகா வித்தியாலய அதிபர் ரெ.மோகன் மேற்கொண்டு வருகின்றார்.பூஜைகளுக்கு பின்னர், மண்சரிவில் மரணமானவர்கள் தொடர்பாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும் ‘நினைவஞ்சலி’ நூலொன்றையும், வெளியிட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மீரியபெத்தையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான 75 வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், ஒரு வருடம் பூர்த்தியாகியும் பத்து வீடுகள் மட்டுமே நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவ்வீடுகளும் இன்னும் பூர்த்தியடையவில்லை. தேயிலைத் தொழிற்சாலை நலன்புரி நிலையத்தில், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தொடர்ந்தும் இருந்து வருகின்றோம். எப்போ விடிவு கிடைக்குமென்று எதிர்பார்த்த வண்ணமுள்ளோம் என்று மண்சரிவில் பாதிக்கப்பட்;டவர்கள் தெரிவிக்கின்றனர். மண்சரிவினால் பாதிக்கப்பட்டபோதும் அதற்கு பின்னரும் வந்த மலையக தலைவர்கள், கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தலின் போது மீண்டும் வருகைதந்து பல்வேறான உறுதிமொழிகளை வழங்கினர். எனினும், அதற்கு பின்னர் அந்த தலைமைகள் இன்னும் இங்கு வருகைதரவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.