தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள்-
தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்துள்ள சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தினால் சுகவீனமுற்ற 20 கைதிகள் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன புஷ்பகுமார தெரிவித்துள்ளார். குடும்பத்தாருடன் சேர்ந்து வாழும் சந்தர்ப்பத்தைத் தமக்குப் பெற்றுத்தருமாறு இவர்கள் எழுத்துமூல கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி கடந்த திங்கட்கிழமை தமிழ் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்திருந்தனர். இந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் 5 நாட்களை எட்டியுள்ளது. தமிழ் கைதிகளின் போராட்டத்திற்கு வலுவூட்டும் வகையில் யாழ்ப்பாணம் முனீஸ்வரர் கோயிலுக்கு முன்னால் இன்று காலை உண்ணாவிரதப் போராட்டமொன்று ஆரம்பமானது. தமிழ் அரசியல் கட்சிகள், காணாமல் போனோரின் உறவினர்கள், தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள், சிவில் அமைப்புக்கள் என பல்வேறு தரப்பினர் இதில் கலந்துகொண்டனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், இந்த அரசு அங்கு எந்தவிதமான தமிழ் அரசியல் கைதிகளும் இல்லை என்ற நிலைப்பாட்டை எடுத்து இந்தக் கைதிகளின் விடுதலையை அவர்கள் காலதாமதம் செய்கின்ற ஒரு நிலைமை உள்ளது. எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்தக் கால தாமதத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. உடனடியாக இவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். இந்தக் கைதிகளை விடுதலை செய்வதன்மூலம் தங்களுடைய நல்லிணக்க அடையாளத்தை இவர்கள் நிருபிக்க முடியும். இதை இவர்கள் செய்ய வேண்டும். செய்கின்றபோதுதான் தமிழ் மக்கள் ஓரளவு தன்னும் ஒரு நம்பிக்கை வைப்பார்கள் இந்த அரசு ஏதோ எங்களுக்கு செய்ய இருக்கின்றது என்று என்றார். இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக சமூகத்தினரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். வவுனியாவிலும் மற்றுமொரு அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நகர சபை முன்றலில் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், கிளிநொச்சியிலும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் வெலிக்கடை சிறைச்சாலை முன்றலில் சத்தியாகிரகமொன்றை இன்று முன்னெடுத்திருந்தனர்.