முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தொடர் விசாரணை-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்றுமுற்பகல் பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னிலையில் ஆஜரானார். நேற்றைய தினமும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னிலையில் ஆஜராகி இருந்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்க தொலைக்காட்சி ஒன்றில் விளம்பரங்களை பிரசுரித்தமைக்கு கட்டணம் வழங்காமை தொடர்பிலேயே இவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. முன்னதாக அண்மையில் பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகள் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்கே சென்று வாக்கு மூலத்தைப் பெற்றனர். இன்றும் அவரை ஆணைக்குழுவுக்கு வருமாறு அழைக்கப்பட்டதையடுத்தே அவர் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார். இதேவேளை மஹிந்த தரப்பினரால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபங்களை நிராகரித்த நிலையிலேயே ஆணைக்குழு, விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்கின்றது.
சிறுவர்களை பணியில் ஈடுபடுத்துவதை தடுப்பது குறித்த கலந்துரையாடல்-
சிறுவர்களை வேலைக்கமர்த்துவதை இல்லாமல் செய்யும் வேலைத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான நிகழ்வு நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செலயக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தை, சிறுவர் தொழில் அற்ற பிரதேசமாகப் பிரகடனப்படுத்துவதற்கான உத்தியோகபூர்வ பிரகடனத்தை மாவட்ட அரசாங்க அதிபர் வாசித்தார். மாவட்ட தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஜே.திருச்செல்வம், கிழக்கு மாகாண பிரதி தொழில் ஆணையாளரும், மட்டக்களப்பு மாவட்ட உதவித் தொழில் ஆணையாளருமான கே.எல்.கபீர், அம்பாறை மாவட்ட உதவித் தொழில் ஆணையாளர் ரி.லக்ஷ்மிதரன், பிரதேச செயலாளர்கள், சிறுவர்கள் தொடர்பில் செயற்படும் உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதன்போது சிறுவர்களை தொழில்களில் அமர்த்துதல், அதற்கெதிரான நடவடிக்கைகள், சிறுவர் தொழிலைக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன், கலந்துரையாடலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
வெலிகட சிறைச்சாலைக்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டம்-
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று கொழும்பு வெலிகட சிறைச்சாலைக்கு முன்னால் சத்தியாக்கிரகமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகளை விடுதலைச் செய்வதற்கான தேசிய அமைப்பு இதனை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் பல அமைப்புகள் மேற்படி ஆர்ப்பாட்டத்தில் இணைந்துகொண்டுள்ளன. அரசியல் கைதிகளுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் வரை சத்தியாக்கிரகம் தொடருமென அதன் ஏற்பாட்டாளர் சுந்தரம் மஹேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் ஆர்ப்பாட்டம் இன்றுடன் ஐந்தாவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
யாழில் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட பெண் மீட்பு, ஒன்பதுபேர் கைது-
யாழ். வல்வெட்டித்துறை கம்பர்மலை பகுதியில் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட குடும்பப் பெண், நேற்றுக்காலை புத்தூர் பகுதியிலுள்ள சட்டதரணி ஒருவரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்கு காரணமான அவரது கணவர் உட்பட 9 பேரை வல்வெட்டித்துறை இரகசிய பொலிஸார் கைதுசெய்துள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்கு பொறுப்பான உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். பருத்தித்துறை நீதிமன்றில் இடம்பெற்று வரும் தாபரிப்பு வழக்கு நடவடிக்கைக்கு தாயாருடன் சென்று விட்டு திரும்பிய இ.ஜானகி (வயது 32) என்ற குடும்பப் பெண்ணை வெள்ளை வானில் வந்த கும்பல், கம்பர்மலை பகுதியில் வைத்து புதன்கிழமை (14) கடத்திச் சென்றிருந்தது. சம்பவம் தொடர்பில் பெண்ணின் தாயார், வல்வெட்டித்துறை பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ரீ.எஸ்.மீடின் தலமையிலான இரு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. இதனையடுத்து கடத்தப்பட்ட பெண், புத்தூர் பகுதியிலுள்ள சட்டத்தரணியொருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து விரைந்து நடவடிக்கை எடுத்த பொலிஸார், அவரை மீட்டனர். இக்கடத்தலுக்கு கணவர் 25,000ரூபாய் கூலியாக கொடுத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்தவர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், குறித்த நபர்களை பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.