தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது-
பொதுமன்னிப்பு அளித்து தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நாடு தழுவிய ரீதியில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வந்த தமிழ் அரசியல் கைதிகள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எழுத்து மூலம் வழங்கியுள்ள உத்தரவாத்தினைத் தொடர்ந்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இன்று மகசின் சிறைச்சாலைக்கு சென்று கைதிகளைப் பார்வையிட்டதுடன், ஜனாதிபதியின் உறுதிமொழி தொடர்பில் அறிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதியின் உறுமொழியை நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் கொடுத்துள்ள அரசியல் கைதிகள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தினை நிறைவு செய்துள்ளனர். அத்துடன், ஜனாதிபதியின் உறுதிக்கு அமைவாக நவம்பர் 7ஆம் திகதி முடிவு கிடைக்கவில்லையாயின் அன்று தொடக்கம் மீண்டும் தமது போராட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர். இதேவேளை, ஜனாதிபதியின் உறுதிமொழிக்கு அமைய நவம்பர் 7ஆம் திகதி அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிடின், அவர்களுடன் இணைந்து தாமும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவித்தார். இதேவேளை தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் அவர்களை உடனடியாக விடுதலை செய்யவும் கோரி, மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமங்கேஸ்வரர் பிள்ளையாளர் ஆலய வளாகத்துக்கு முன்பாக அடையாள உண்ணாவிரதமொன்று இன்றுகாலை தொடக்கம் இடம்பெற்று வந்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடளுமன்ற உறப்பினர்களான ஞா.சிறிநேசன், எஸ்.வியாளேந்திரன், அம்பாறை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் கவீந்திரன்(றொபின்) மற்றும் கிழக்கு மாகாண விவாசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பி.அரியநேந்திரன், பொன். செல்வராசா மற்றும் கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரன்(ஜனா) இரா.துரைரத்தினம் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள், பிரமுகர்கள் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறைச்சாலைகளில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.