தர்மத்தின் நிழலாய் வாழ்ந்த ஈழத்தின் கருமவீரன்

– இந்திரன் –

devid aiya avarkalவிடிவுக்காக தியாகம் புரிந்தவர்களை எடையிடும்போது உயிர்நீத்த மாவீரர்களையே அளவுகோலாக கொள்வது வழமை. வார்த்தையில் சொல்லிவிட முடியாத அளப்பெரிய அர்ப்பணிப்புக்களை மேற்கொண்ட தமிழ் இளைஞர்களின் போராட்டத்தின் ஆரம்பகாலம் என்பது தமிழ் மக்கள் மத்தியில் அல்லாமல் உலக அரங்கிலேயே புரட்சிக்கான இலக்கணங்களை வகுத்தது. அவ்வாறான தகுதியை மிதவாத அரசியல் சிந்தனை கொண்ட தேசப்பற்றாளர்களுக்கோ அரசியல்வாதிகளுக்கோ தமிழ்மக்கள் அவ்வளவு இலகுவில் வழங்க விரும்பியதில்லை. என்னதான் தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் என்று தேசத்துக்காக உயிரையே மாய்த்தாலும் மிதவாதிகளின் கொள்கைகள் எனப்படுவது அவர்களுக்கு சேரவேண்டிய பெருமைக்கு பெரும் தடைக்கல்லாக இருந்துவந்தமை தமிழரசியல் பரப்பில் பாரம்பரியமாக இருந்து வந்துள்ளது.

இந்த பாரம்பரிய மரபை உடைத்தெறிந்த கர்ம வீரர்களில் முக்கியமானவர்தான் டேவிட் ஐயா.

அவரது வாழ்வும் இயக்கமும் மரணமும் இன்று புராணங்கள் போல நினைவுகூரப்பட்டாலும் தமிழ்மக்களின் விடிவு என்ற விடயத்தில் அவர் கொண்ட கொள்கையும் அதற்காக அவர் வகுத்த விடுதலைப் பாதையும் இன்றும்கூட பின்பற்றக்கூடியதாக நம் முன் விரிந்து கிடப்பதுதான் ஆச்சரியம். டேவிட் ஐயாவை இலங்கையில் காந்திய அமைப்பை தோற்றுவித்த கர்த்தாவாக உருவகிப்பதன் மூலம் அவரை அஹிம்சையின் வடிவம் கொண்டவராக உருவகித்துக் கொள்வதில் பலர் முனைப்படையலாம். அவரை ஈழத்து காந்தி என்று அழையாத குறையாக அவரது கொள்கைகளை அமைதியின் உச்சமாக பதிவு செய்ய முயலலாம்.

ஆனால், எழுபதிகளின் பிற்கூறுகளிலும் எண்பதுகளிலும் டேவிட் ஐயாவை போல மூர்க்கமான விடுதலைகுணம் கொண்ட மிதவாதி என்று எவரும் அப்போது இருந்ததில்லை என்பதும் தங்களது உணர்ச்சியின் வேகத்தை மிகவும் தீர்க்கமாகவும் புத்திக்கூர்மையுடனும் உபயோகித்துக் கொண்டவர்களும் அப்போது இருந்ததில்லை என்பது பலரும் அறியாத விடயம் என்கிறார்கள் அவருடன் பணியாற்றியவர்கள்.

டேவிட் ஐயாவின் காந்திய அமைப்பின் முக்கிய பொறுப்பில் பணியாற்றிய ஒருவர் அண்மையில் பேசும்போது கூறுகையில் –

காந்திய அமைப்பை ஆரம்பித்த டேவிட் ஐயா அதில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தபோது தமிழர் பிரதேங்களில் சிங்கள படைகள் மேற்கொண்ட தொடர்ச்சியான அடக்குமுறைகளை சகிக்க முடியாமல் ஒருமுறை “அம்பது எஸ்.எம்.ஜி. மட்டும் இருக்கவேணும். இவங்களை அடிச்சுக்கொண்டுபோய் தெற்கிலயே விட்டுட்டு வரலாம்” என்று டேவிட் ஐயா கூறிய விடயங்களையும் நினைவு கூர்ந்தார்.

இஸ்ரேலின் வரலாற்றை வெகுவாக விரும்பிய டேவிட் ஐயா இஸ்ரேலுக்கான பயணத்தை மேற்கொண்டுவந்த பின்னர் அந்த நாட்டின் உருவாக்கமும் அதற்காக அவர்கள் மேற்கொள்ளப்பட்ட தந்திரோபாயங்களும் அவரை மிகவும் கவர்ந்ததாகவும் அவர் குறிபட்டார்.

இஸ்ரேல் என்ற தனிததேச உருவாக்கத்தில் மிகவும் முக்கிய விடயமாக அமைந்தது நிலங்களை பிடிப்பதும் அவற்றில் மக்கள் குடியேற்றங்களை முனைப்புடன் மேற்கொள்வதும்தான் என்ற வரலாற்று சம்பவம் டேவிட் ஐயாவுக்கு தனிநம்பிக்கை ஒன்றை ஏற்படுத்தியது என்றும் –

அந்த வழியை தமிழர் தாயகத்திலும் பின்பற்றிக்கொள்வததுதான் தேசக்கட்டுமானத்துக்கான பிரதான அச்சாணியாக அமையமுடியும் என்பதில் அவர் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தார் என்றும் டேவிட் ஐயாவுடன் பணியாற்றிய அந்த பெரியவர் கூறினார்.

அவரது இஸ்ரேல் ஈர்ப்பு கொள்கை என்பது களத்தில் எவ்வாறு பிரதிபலித்தது என்பதை அவரது ஆரம்பகால செயற்பாடுகள் குறித்து அறிந்தவர்கள் எவரும் படித்திருப்பர்.

அதாவது, 83 கலவரத்தின்போது தலைநகரிலிருந்தும் மலையகத்திலிருந்தும் தமிழ்மக்களை பெரும் எண்ணிக்கையில் தமிழர் தாயகத்தின் எல்லை பிரதேசங்களில் குடியமர்த்தி குடிசனப்பரம்பலை செறிவாக்கியது மட்டுமல்லாமல் தமிழர் தாயகத்தில் எல்லைகளை விரிவாக்கிக்கொண்டதில் டேவிட் ஐயாவின் பங்கு மிகப்பெரியது.

அண்மையில், டேவிட் ஐயாவின் இறுதிநிகழ்வில் பேசிய ஈ.பி.டி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் கூறும்போதுகூட “டேவிட் ஐயா இல்லாவிட்டால் தமிழர் தாயகத்தின் எல்லை இன்று மாங்குளமாக இருந்திருந்தால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை” என்று குறிப்பிட்டிருந்தார். இதுதான் யதார்த்தமாகவும் இருந்தது.

தனது தொழில் சார்ந்து ஒரு அளவையாளராக பணிபுரிந்த அனுபவத்தினாலும் அந்த காலப்பகுதியிலேயே வெளிஉலக அனுபவம் கொண்டவராக இருந்ததாலும் தமிழர் தாயகம் குறித்த பரந்த பார்வை கொண்டவராகவும் அதன் உருவாக்கம் எனப்படுவது எவ்வாறு அமையவேண்டும் என்பதில் தெளிவான சிந்தனையுடையவராகவும் இருந்தார்.

ஆனால், தனது கனவுகள் எல்லாம் அஹிம்சை வழியில் மாத்திரம் சாதிக்கப்படக்கூடியவை என்பதில் டேவிட் ஐயா நம்பிக்கை இழந்திருந்தார் என்பதற்கு ஒரு சம்பவத்தை எடுத்துக் கூறுகையில் –

சிங்கள அரசின் அடக்குமுறை வெறியாட்டத்தினை வெம்மையை எப்போதும் வெளிக்காட்டிக்கொள்ளாத டேவிட் ஐயா, அந்த காலப்பகுதியில் – ஐம்பது வயதுக்கு பின்னரும் – இஸ்ரேலுக்கு சென்று ஆயுதப்பயிற்சிக்காக விண்ணப்பித்தபோது, இவரது வயதை காரணம் காண்பித்து அந்த விண்ணம் நிராகரிக்கப்பட்டதாகவும் சொன்னார்.

இங்கு கவனிக்கக்கூடிய மிகமுக்கிய விடயம் என்னவெனில், சிறிலங்காவின் அரசியலை தங்கள் வாழ்நாள் முழுவதும் தரிசித்து இயற்கை எய்திய இரண்டு தமிழ் நபர்கள் என்றால், ஒருவர் டேவிட் ஐயா. மற்றையவர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் மு.சிவசிதம்பரம்.

இருவரும் தங்கள் வாழ்நாளின் கடைசிக்கூறுகளில் தமிழ்மக்கள் ஆயுதம் ஏந்திய போராடியதை நிராகரிக்கவில்லை. அதை பிழையென்று கூறவில்லை.

சிவசிதம்பரம் அவர்கள் இறப்பதற்கு முன்னர்கூட “சிங்கள தேசத்தின் மனப்பாங்கிற்கு பிரபாகரன் வழிதான் சரியானது” என்று கூறிவிட்டு சென்றார். ஆனால், டேவிட் ஐயா அவர்கள் தானே வாழும்போதே அந்த வழியைநாடி அதனை ஆதரித்திருக்கிறார்.

இதனை அவர்கள் ஒரு வன்முறை பாதையாக முன்மொழியவில்லை. தமிழ்மக்கள் மீது சிறிலங்கா அரசு கைக்கொண்ட அரசியல் வழியை கனதியை சமன்செய்வதற்கு எதிரும் சமமுமான பாதையை அங்கீகரித்தார்கள் என்றவாதம்தான் சரியாக இருக்கும்.

இதனைத்தான், இன்று முலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்கூட மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். அதாவது, “எமது மக்களின் பிரச்சினைகளை உள்ளதை உள்ளபடி கூறினால், நாங்கள் தீவிரவாதிகள் என்று அர்த்தமாகாது. தீவிரவாதிகள் என்று கூறிவிடுவார்களோ என்ற அச்சத்தில் எங்களது மக்களின் பிரச்சினைகளை மக்களின் பிரதிநிதிகளாக இருந்ததுகொண்டு கூறாமல் மௌனிகளாக இருக்கமுடியாது” – என்று அண்மையில் யாழ் இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் பேசும்போது கூறியிருந்தார்.

இதைத்தான் அன்று டேவிட் ஐயாவும் கடைப்பிடித்தார். ஆனால், அவரது அணுகுமுறையில் அக்காலப்பகுதிக்குரிய அரசியல் சூத்திரம் மட்டும் வெளித்தெரிந்தது. அதாவது, காந்தீயம். காந்தியம் எனப்படுவது அன்று உலகம் போற்றிய பொதுவழியாக இருந்தது. ஆகவே, அந்த அந்த சாணக்கிய சட்டையை அணிந்து தன் மக்களுக்காக சேவைபுரிந்தார்.

உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கான பலத்தை அடையும்வரை காலத்துக்கேற்ற சாணக்கிய அரசியலை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பது டேவிட் ஐயாவின் காலத்திலேயே பொதுவழியாக பின்பற்றப்பட்டமை என்பது இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் பொருந்தும் விடயமாகும்.

அந்த வகையில், டேவிட் ஐயா அவர்கள் கட்சி மற்றும் அரசியல் பேதங்களுக்கு அப்பால் யதார்த்தத்தையும் மக்கள்பண்புகளையும் நேர்த்தியாக உள்வாங்கிய ஒரு தேசப்பற்றாளர். கொள்கையில் உறுதியும் காலத்தின் நீட்சியிலும் தன் இனம் சார்ந்த பார்வையும் கர்மவீரர்களின் அடிப்படை பண்புகள் என்று தன் வாழ்வியலால் எழுதி சென்றிருக்கிறார் டேவிட் ஐயா.

“காந்தியும் அவர்பின் னாலே
கணக்கற்ற சீடர் தாமும்
நீந்திய தியாகத் தீயை
நினைக்குங்கால் சிலிர்க்கும் மேனி;
ஏந்திய விளக்கில் தாங்கள்
எண்ணெயாய் விழுந்தார் அந்நாள்
சாந்திக்கு ரத்தம் தந்தார்;
தர்மத்தின் நிழலாய் நின்றார்!

“இன்றைய சமுதா யத்தை
எண்ணுங்கால் அவர்கள் செய்த
அன்றைய தியாகம் யாவும்
அழிந்தன என்றே தோன்றும்;
நன்றிஇல் லாதார் மக்கள்;
நடைமுறை அவமா னங்கள்
மன்றிலை எதையோ கேட்டு
மாலைகள் அணிவிக் கின்றார்;”

(காந்தி பற்றி கண்ணதாசன் எழுதிய கவிதை) (நன்றி தினக்குரல் – 18.10.2015)