யாழ் நீதிமன்றத் தாக்குதல், கைதானோர் பிணையில் விடுதலை-
யாழ். நீதிமன்ற கட்டிட தொகுதியின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில கைதுசெய்யப்பட்ட நபர்களை யாழ். நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது. கடந்த மே 21ஆம் திகதி புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கூட்டு வன்கொடுமைக் கொலையை கண்டித்து யாழ். நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் யாழ். நகரப்பகுதியில் கலவரம் ஏற்பட்டது. அந்த கலவரத்தின்போது யாழ். நீதிமன்ற கட்டிட தொகுதியின்மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அந்த தாக்குதலின் பின் 130 மேற்பட்டவர்கள் யாழ். பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். அவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்கள், ஒவ்வொரு வழக்கு விசாரணையின் போதும் படிப்படியாக பிணையில் விடுதலை செய்யப்பட்டு வந்தனர். இதன்படி குறித்த வழக்கு இன்று யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி பெ.சிவகுமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஏனைய நபர்களையும் தலா 5லட்சம் பெறுமதியான நிபந்தனையுடன் கூடிய 5ஆள் பிணையில் செல்ல அனுமதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ், மன்னார் மாவட்டங்களில் காணாமற்போனவர்கள் தொடர்பில் விசாரணை-
யுத்தம் காரணமாக யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் காணாமற்போனவர்கள் தொடர்பில் கள விசாரணை நடத்தப்படவுள்ளது. இந்த விசாரணை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக காணாமற்போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. காணாமற்போனோர் குறித்த கள விசாரணை தொடர்பில் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களுடன் கலந்துரையாடியதாக ஆணைக்குழுவின செயலாளர் எச்.டபிள்யூ. குணதாஸ குறிப்பிட்டுள்ளார். இந்த மாவட்டங்களில் காணாமற்போனவர்கள் தொடர்பிலான தகவல்ளை திரட்டுவதற்காக ஏற்கனவே படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. பூரணப்படுத்தப்பட்ட படிவங்கள் தற்போது கிடைத்து வருவதாக காணாமற்போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த படிவங்கள் கிடைத்தவுடன் அந்தந்த இடங்களுக்கு சென்று மேலதிக கள விசாரணையை நடத்தி முடிப்பதற்கு உத்தேசித்துள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு பூட்டு-
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு வந்தாறுமூலை வளாகத்தில் இரண்டு மாணவக் குழுக்களுக்கிடையில் இன்று இடம்பெற்ற கைகலப்பைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதில் பதிவாளர் ஏ.பகிரதன் தெரிவித்துள்ளார் கலைப்பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கிடையில் இந்தக் கைகலப்பு இடம்பெற்றது. இதன்போது பாதிக்கப்பட்ட 06 மாணவிகள் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழகத்தின் விரிவுரைகள் மறு அறிவித்தல்வரை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் விடுதிகளிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டுமென்றும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு-
போர்க்குற்றச்சாட்டுகள் சம்பந்தமான விசாரணைகள் தொடர்பில் கட்சிகளின் கருத்துக்களை பெறுவதற்கான அனைத்துச் கட்சிக் கூட்டமொன்று நாளை மறுதினம் (22.10.2015) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். போர்க்குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புடன் உள்நாட்டு விசாரணை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்காகவே இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல அரசியல் கட்சிகள் பங்கேற்கவுள்ளன.
சஜின் வாஸ் சிங்கப்பூர் செல்வதற்கு அனுமதி-
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன மருத்துவ சிகிச்சைகளுக்காக 5 நாட்கள் வெளிநாடு செல்ல கொழும்பு பிரதம நீதவான் இன்று அனுமதியளித்துள்ளார். எவ்வாறாயினும் நிபந்தனை அடிப்படையிலேயே அவருக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவ சிகிச்சைகளுக்காக சிங்கப்பூருக்கு மாத்திரமே செல்ல முடியும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 25ஆம் திகதிக்கும் 30ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் சிகிச்சைகளை பெற வேண்டும் எனவும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. நவம்பர் மாதம் 3ஆம் திகதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன தனது கடவுச் சீட்டையும், சிகிச்சைகள் தொடர்பிலான ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் பேரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு இந்த அனுமதியை வழங்கவும் நீதிமன்றம் தீர்மானித்ததாக தெரியவருகின்றது.
கனடா பாராளுமன்றத் தேர்தலில் ஹரி ஆனந்தசங்கரி வெற்றி, ராதிகா தோல்வி-
கனடா பாராளுமன்றத் தேர்தலில் ஹரி ஆனந்தசங்கரி வெற்றியீட்டி பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். இம்முறை கனடா பாராளுமன்றத் தேர்தலில் ஐந்து தமிழர்கள் போட்டியிட்டிருந்தனர். ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட சட்டத்தரணி ஹரி ஆனந்தசங்கரி அமோக வெற்றியீட்டியுள்ளார். இவர் தனது 10 வயதில் 1983 ஆம் ஆண்டு கனடாவில் குடியேறியிருந்தார். இதேவேளை, கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய ராதிக சிற்சபைஈசன் இம்முறை தோல்வியடைந்துள்ளார். இதனைத் தவிர கந்தரத்தினம் சாந்திக் குமார், செந்தி செல்லையா, ரொசான் நல்லரத்தினம் ஆகிய தமிழ் வேட்பாளர்களும் இம்முறை கனடா பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளனர்.
பொலிஸ் உத்தியோகத்தர் காணாமல் போனமை தொடர்பில் அறிக்கை கோரல்-
வவுனியா பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தின் சுற்றிவளைப்புப் பிரிவில் பணிபுரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் குணதிலக்க காணாமல் போனமை தொடர்பாக உரிய விசாரணையை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த விசாரணைகளை முடித்து விரைவில் தன்னிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோனிடம், ஜனாதிபதி அறிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 07ஆம் திகதி தனது வீட்டுக்கு செல்வதாகக் கூறி பணியிடத்தில் இருந்து புறப்பட்ட குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் குறித்து அதன் பின் எந்தத் தகவலும் இல்லை. இந்நிலையில் இவரைக் கண்டுபிடித்துத் தருமாறு பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவி மற்றும் மகள் ஊடகங்கள் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள ஜனாதிபதி பொலிஸ் உத்தியோகத்தர் காணாமல் போனமை குறித்து விரைவில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளார்.
பிரேமலால் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியலில் நீடிப்பு-
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகர உள்ளிட்ட சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் கஹவத்தை பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரேமலால் ஜெயசேகர உள்ளிட்ட சிலருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இது குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, இது தொடர்பான விசாரணைகள் நிறைவுக்கு வரவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டனர். இதன்படி சந்தேகநபர்களை தொடர்ந்தும், நவம்பர் 3ம் திகதிவரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு, பெல்மடுல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.