ஐ.நா அதிகாரி மிரொஸ்லாவ் ஜென்கா இலங்கைக்கு விஜயம்-
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் மிரொஸ்லாவ் ஜென்கா இன்று இலங்கைக்கு வருகைதரவுள்ளார். ஐ.நா பொதுச் சபையின் சமீபத்திய அமர்வின்போது, இலங்கை ஜனாதிபதிக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தே இந்த விஜயம் இடம்பெறவுள்ளது. ஜென்காவின் விஜயம் இலங்கை அதிகாரிகளுடனும், சகல தரப்பினருடனும் பேச்சுக்களை தொடர்வதற்கான வாய்ப்பாக அமையுமென கூறப்படுகிறது. அத்துடன் அவர் இலங்கையின் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளிற்கான ஐக்கிய நாடுகளின் ஆதரவையும் வெளியிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எதிர்வரும் 24ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள ஐ.நாவின் 70வது வருட நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.
வவுனியா கோமரசன்குளம் மகாவித்தியாலயத்தில் விசேட நிகழ்வு-(படங்கள் இணைப்பு)
வவுனியா கோமரசங்குளம் மகா வித்தியாலத்தில் 2015ம் ஆண்டிற்கான நீங்கள் எமக்கு அதிசிறந்தவர்கள் எனும் நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர்களான கௌரவ ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா, இ.இந்திரராஜா, எஸ்.தர்மபாலா மற்றும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். வட மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து இப் பாடசாலைக்கு உதவிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.