மக்கள்மீது இராணுவம் தாக்குதல் நடத்தியமை அறிக்கையில் சுட்டிக்காட்டு-

shell attackஇறுதிக்கட்ட யுத்தத்தின்போது, இலங்கையில் இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஏற்றுக்கொள்வதாக, ஓய்வுபெற்ற நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவிக்கின்றது. காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் நியமிக்கப்பட்ட இக் குழுவினது ஆணைப்பரப்பு, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக்குற்றங்கள் தொடர்பான விசாரிப்பதற்கு விரிவுபடுத்தப்பட்டது. தங்களது விசாரணை அறிக்கையை இக்குழு அண்மையில் ஜனாதிபதியிடம் கையளித்ததோடு, இவ்வறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஐ.நா சபையால் நியமிக்கப்பட்ட மர்ஸ_கு தருஸ்மன் தலைமையிலான குழுவால் தெரிவிக்கப்பட்ட ‘40,000 வரையிலான பொதுமக்கள் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டிருக்கலாம்” என்ற வாதத்தை மறுத்துள்ள பரணகம அறிக்கை, யுத்தத்தின் இறுதி மணித்தியாலங்களில் கூட தங்களது நன்மைக்காக, தமிழீழ விடுதலைப் புலிகளே பொதுமக்களை அதிகளவில் கொன்றதாக தெரிவிக்கின்றது.சிறுவர்களின் கட்டாய ஆட்சேர்ப்பு உள்ளிட்டதாக பொதுமக்கள்மீதான புலிகளின் ஒட்டுண்ணி நடவடிக்கைகளை, பிரபல்யமான அரசசார்பற்ற நிறுவனங்களும் சர்வதேச அமைப்புகளும் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவிக்கும் அவ்வறிக்கை, யுத்தத்தின் இறுதி 12மணித்தியாலங்களில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு புலிகளே காரணமாக அமைந்தனரென தெரிவிக்கின்றது. இதேவேளை, இராணுவத்தினரின் குண்டுத் தாக்குதல்களால் பொதுமக்களின் இறப்பு அதிகரித்தது என்பதை ஏற்றுக்கொள்ளும் அறிக்கை, அதன் காரணமாக ‘கணிசமானளவு இறப்புகள்” ஏற்பட்டதென தெரிவிக்கிறது. எனினும், பொதுமக்களை விடுவிக்காமல் மனிதக் கேடயங்களாகப் புலிகள் பயன்படுத்தியமையாலேயே இது ஏற்பட்டது எனவும் அது தெரிவிக்கின்றது. நீதியரசர் தலைமையிலான இக்குழுவில், சுரஞ்சன வித்தியாரத்ன, திருமதி மனோ இராமநாதன், டபிள்யூ.ஏ.டி இரத்நாயக்க, எச்.சுமதிபால ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.