ஜெனீவா யோசனை தொடர்பில் அனைத்து கட்சி மாநாடு-
ஜெனீவா யோசனை தொடர்பில் அரசாங்கம் செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் கருத்து கோரும் அனைத்து கட்சி மாநாடு ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 21 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்று இடம்பெறவுள்ள அனைத்து கட்சி மாநாட்டில் ஒன்றிணைந்த எதிர்கட்சி கலந்துகொள்ள தீர்மானித்துள்ளது. இந்த மாநாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் கலந்து கொள்ளவுள்ளதாக குழுக்களின் பிரதி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கூறியுள்ளார்.
ஐ.நா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்-பர்ஹான் ஹக்-
யுத்தத்துடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பான பொறுப்புக்கூறலுக்கு ஐ.நா தொடர்ந்து, அழுத்தம் கொடுக்கும் என்று, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா உதவிச் செயலர் மிரோஸ்லாவ் ஜென்கா, இது குறித்து இலங்கை ஜனாதிபதி மற்றும் அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவார். நிச்சயமாக நாம் எப்போதும், பொறுப்புக்கூறலுக்கு அழைப்பு விடுத்து வந்துள்ளோம். தொடர்ந்தும் அதற்கு அழுத்தம் கொடுப்போம் என்றும் பர்ஹான் ஹக் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய விசேட பிரதிநிதி பிரதமர் ரணில் சந்திப்பு-
ஜப்பான் அரசின் விஷேட பிரதிநிதியாக நாட்டுக்கு வருகை தந்துள்ள மோடோ நோகுச் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். நேற்று மாலை அலரி மாளிகையில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் நிபுணரான மோடோ நோகுச் பிரதமருடன் நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். அத்துடன் இலங்கையின் உள்ளக விசாரணைகளுக்கு பூரண ஒத்தழைப்பை பெற்றுக் கொடுப்பதாக அவர் பிரதமரிடம் உறுதியளித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
டெஸ்மன் சில்வா என்ற பெயரில் அறிக்கையில்லை-பிரதமர்-
இறுதியுத்த காலப்பகுதியில் காணாமல்போனவர்கள் தொடர்பில் டெஸ்மன் சில்வா என்ற பெயரில் அறிக்கையொன்று இல்லை என பிரதமர் இன்று உறுதிப்படுத்தினார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் ஜெனீவா மனிதவுரிமைகள் யோசனை தொடர்பான விவாதத்தின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது உரையில், ஸ்ரீமத் டெஸ்மன் டி சில்வா, மெக்ஸ்வல் பரணகம ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பை மாத்திரமே வழங்கியதாக குறிப்பிட்டார். காணாமல் போனவர்கள் தொடர்பான ‘மெக்ஸ்வல் பரணகம ஆணைக்குழுவுக்காக ஸ்ரீமத் டெஸ்மன் சில்வா மற்றும் ஸ்ரீமத் ஜேப்ரி நைஸ் மற்றும் பேராசிரியர் டேவிட் கிரேன் ஆகியோர் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். இன்றுகாலை தாம் டெஸ்மன் டி சில்வாவுடன் உரையாடியதாக தெரிவித்த பிரதமர், அவரின் பெயரில் அறிக்கையொன்று இல்லையென தாம் உறுதிப்படுத்திக் கொண்டதாக கூறியுள்ளார்.