பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கைது-

vimalகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்றுகாலை கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவரும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் காலை விமல் வீரவன்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்து கொண்ட பின்னர் அவரை கைதுசெய்துள்ளதுடன் அவரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இன்றுகாலை செல்லுபடியற்ற கடவுச்சீட்டில் இத்தாலிக்கு புறப்பட்டுச் செல்வதற்கு முற்பட்டவேளை விமல் வீரவன்ச குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர் கைதுசெய்யப்பட்டிருந்தார். பிந்திய தகவலின்படி விமல் வீரவன்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் அவரை 10,000 ரூபா ரொக்கம் மற்றும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையிலும் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. 

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் கைது-

prasanthanதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் இன்று காலை காத்தான்குடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2008ம் ஆண்டு மட்டக்களப்பு காத்தான்குடிப் பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில், வீட்டில் வைத்து ஆசிரியரான தமிழ்நாட்டு மனோகரன் எனப்படும் கிருஷ்ணப்பிள்ளை மற்றும் அவரது மனைவி தயாளினி ஆகியோர் ஒரே நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி தம்பதியான இருவரினதும் கொலை தொடர்பாக புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்ததன் பிரகாரம், பிரசாந்தன் நேற்று வியாழக்கிழமை இரவு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தோடு தொடர்புடைய மற்றொரு சந்தேகநபரான பிரசாந்தனின் சகோதரன் தலைமறைவாகி விட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இலங்கை – இந்திய மீனவர் தொடர்பான பேச்சுவார்த்தை-

fishermen talksஇலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகளைக்குத் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தையொன்று இன்று நடைபெறவுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட குழுவினர் இப் பேச்சுவார்த்தையில் பங்குபற்றவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வொன்றை எட்டுவதற்காக பல்வேறு தரப்புகளிடம் இருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்ட அபிப்பிராயங்கள் இதன்போது சம்பாஷணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து கடற்படை, கரையோரப் பாதுகாப்புப் பிரிவு மற்றும் வடபகுதி மீனவர் தரப்புகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

புத்தளம் வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு, 33பேர் காயம்-

accidentபுத்தளம் பிரதேசத்தில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 33 பேர் வரை காயமடைந்துள்ளனர். புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாரளர் தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது. வென்னப்புவ டிப்போவுக்கு சொந்தமான பஸ் ஒன்று முல்லைத்தீவில் இருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த வேளையிலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது. காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. புத்தளம் பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர்.

ஐ.நா பிரேரணையை தோற்கடித்தே தீருவோம்-வாசுதேவ-

140204184940_vasudeva_nanayakkara_304x171_lanintegmin_gov_lkஇலங்கை மீதான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையை, தோல்வியடைய செய்வோம் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை தொடர்பிலான விவாதம், நாடாளுமன்றத்தில் இன்றுஇடம்பெற்ற போது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். ஜனாதிபதி, நாடாளுமன்றம் மற்றும் மக்கள் என அனைவரும் இந்த பிரேரணையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தான் நம்புவதாகவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கூறியதுபோல, ஜெனிவா அறிக்கையைவிட பரணகம அறிக்கை கடுமையானதாக இருந்தால் எமது நாட்டில், சாட்சிகளை விசாரித்து பரணகம அறிக்கைக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வாசுதேவ நாணயக்கார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சரத் அமுனுகம அமைச்சராக பதவிப் பிரமாணம்- தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு மேலதிக உறுப்பினர்கள் நியமனம்-

amunugamaகலாநிதி சரத் அமுனுகம அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இன்றுமுற்பகல் பதவிப்பரமாணம் செய்து கொண்டுள்ளார். விசேட பணிகள் அமைச்சராக அவர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பரமாணம் செய்துகொண்டுள்ளார். இதேவேளை அரிசியலமைப்புச் சபையின் பரிந்துரைக்கு அமைய, ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவினால் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு இரண்டு புதிய உறுப்பினர்கள் இன்று நியமிக்கப்பட்டனர். அமைச்சுக்கள் பலவற்றில் செயலாளராக பணியாற்றிய சிரேஷ்ட நிர்வாகத்துறை அதிகாரி திலக் கொலுலுரே, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பிராங் டி சில்வா ஆகியோரே தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் மங்கள சமரவீர மிரோஸ்லாஃப் ஜென்கா சந்திப்பு-

UN officerஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நாயகம், மிரோஸ்லாஃப் ஜென்கா, இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற ஐநா பொதுச் சபைக் கூட்டத்தொடரின்போது ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீமூனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து கலந்துரையாடியிருந்த நிலையில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.