தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் – இன்று கொழும்பில்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒன்றுகூடல் இன்று கொழும்பில் புளொட் அமைப்பின் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போது ஜெனீவா தீர்மானம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவ ஆக்கிரமிப்பின் கீழுள்ள காணிகளை விடுவித்தல், மீள்குடியேற்றம், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இராணுவ பிரசன்னத்தைக் குறைத்தல் உட்பட்ட விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு ஒழுங்காக கட்டமைக்கப்பட்ட அரசியல் அமைப்பு வடிவத்தை எடுப்பதற்கு இடையூறாக உள்ள விடயங்கள் தொடர்பாகவும் பேசப்பட்டது. இது தொடர்பாக ஆக்கபூர்வமான முடிவொன்றை எடுப்பதையிட்டு கலந்துரையாடுவதெனவும், தமிழரசுக் கட்சியிடம் கூட்டமைப்பின் ஏனைய அங்கத்துவக் கட்சிகளினால் சமர்ப்பிக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாப்பு குறித்த தமிழரசுக் கட்சியின் யோசனைகள் தொடர்பாகவும் எதிர்வரும் 29ம் திகதி கட்சித் தலைவர்கள் கூடி பேசுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.சர்வகட்சி மாநாட்டின்போது ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைவாக கட்சிகள் சமர்ப்பிக்கவுள்ள யோசனைகள் தொடர்பாக கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் கட்சிகள் தனித்தனியே தமது யோசனைகளை சமர்ப்பிப்பதெனவும் அதற்கு முன்னதாக அவ் யோசனைகளை 29ம் திகதி நடைபெறவுள்ள கூட்டமைப்பின் தலைவர்களின் சந்திப்பில் முன்வைத்து அது தொடர்பாக ஆராய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.