கேபியை கைது செய்யாதது குறித்து சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் விளக்கம்

KPவிடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்த குமரன் பத்மநாதன் தொடர்பான அறிக்கையொன்றை சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ளார்.

குமரன் பத்மநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு கோரி மக்கள் விடுதலை முன்னணி தாக்கல் செய்த மனு இன்று புதன்கிழமை அழைக்கப்பட்டபோது சட்ட மா அதிபர் இதனை தெரிவித்த போதிலும் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் சம்பந்தான விபரங்களை நீதிமன்றத்தில் அவர் குறிப்பிடவில்லை.இந்த அறிக்கையின் பிரதியொன்றை தங்களுக்கும் பெற்றுத்தர வேண்டும் என்று மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி பிரதியொன்றை மனுதாரர்களுக்கு பெற்றுக்கொடுக்குமாறு உத்தரவிட்டதாக மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுனில் வடகள தெரிவித்தார்.

குமரன் பத்மநாதன் தொடர்பான அறிக்கையை முன்வைப்பதற்கு சட்டமா அதிபர் ஒன்பது மாதங்களை எடுத்துக்கொண்டதாக குற்றம் சாட்டினார்.

குமரன் பத்மநாதனை கைது செய்வதைத் தவிர்த்து சட்ட மா அதிபர் இவ்வாறான அறிக்கையை சமர்ப்பித்துள்ளமை வேடிக்கையாக இருப்பதாகக் கூறிய வழக்கறிஞர் சுனில் வடகள, இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விவரங்களை ஆராய்ந்த பின்னர் தனது நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு அறிவிக்கவிருப்பதாக தெரிவித்தார்.

இதன் பின்னர் வழக்கு விசாரணை நவம்பர் மாதம் 12 தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென்றும் நீதிபதி அறிவித்தார்.

இதேவேளை குமரன் பத்மநாதன் வெளிநாடு செல்வதைத் தடை செய்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு இந்த வழக்கு அடுத்து விசாரணைக்கு வரும் தினம் வரை நீடிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது