மட்டக்களப்பு மற்றும் திருமலையில் வெடிபொருட்கள் மீட்பு–
மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, இது தொடர்பாக சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை ஊழியர்கள் வெள்ளம் காரணமாக தேங்கி நிற்கும் நீரினை வழிந்தோடச் செய்யும் முகமாக கல்குடாவில் பெக்கோ இயந்திரத்தின் துணையுடன் வடிகான் அமைக்கும் பணியினை முன்னெடுத்தனர். இதன்போது மர்மப்பொருள் ஒன்று தென்படுவதையடுத்து அருகிலுள்ள பொலிஸாருக்கு தகவல் வழங்கினர், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அங்கிருந்து ஆட்லறி 122 மோட்டார் குண்டை கைப்பற்றினர். பின்னர் குண்டு செயழிக்கச் செய்யும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு அவற்றினை செயழிக்கச் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதேவேளை, திருகோணமலை – வில்கம் விகார பிரதேசத்தில் பற்றை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வெடிபொருட்களை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றி உள்ளனர். நேற்றுப்பகல் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் ஒருவரை கைதுசெய்துள்ளனர். வெடிபொருட்களுடன் சந்தேகநபர் உப்புவெளி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார். உயர் வெடி மருந்து 1.5 கிலோ கிராம், டெட்டனேற்றர் 182, டெட்டனேற்றர் வயர் 1820 அடிகள். அமோனியம் நைற்றிஜன் 101 கிலோ என்பன இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.