மாணவர்கள் தாக்கப்பட்டமை குறித்து விசாரணைக்கு பணிப்பு-

arpattamகொழும்பு வோட் பிளேஸில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக இடம்பெற்ற மாணவர்களின் ஆர்ப்பாட்ட நடவடிக்கையின்போது பொலிஸாரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நேற்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக எச்.என்.டீ.ஏ மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரியோகம் மேற்கொண்டிருந்தனர். இதேவேளை ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்காக பொலிஸார் செயற்பட்ட விதம் குறித்து பிரதமர் அறிக்கையொன்றை கோரியுள்ளார். இது தொடர்பில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பனவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து அமைச்சருடன், பிரதமர் நேற்று விசேட பேச்சுவார்த்தை ஒன்றையும் நடத்தியுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்தபோது கைதான 2 பிக்கு மாணவர்கள் உட்பட 39 பேரும் கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். வணிகவியல் பாடநெறிக்கு சமமான அங்கீகாரத்தை தமது பாடநெறிக்கும் வழங்குமாறு வலியுறுத்தி இந்த மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.