கிரீஸில் படகு மூழ்கி குழந்தைகள் உட்பட 22பேர் பலி-

greezeஐரோப்பாவில் தஞ்சம் கோரி கடல் மார்க்கமாக கிரீஸ் நாட்டு காலிம்னோஸ் மற்றும் ரோட்ஸ் தீவு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த அகதிகளின் படகு மூழ்கியதில் 13 குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 144 பேர் காப்பாற்றப்பட்டதாக கிரீஸின் துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்றுகாலை காலிம்னோஸ் தீவில் 19 சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. இதில் 6 பெண்கள், 10 குழந்தைகள் அடங்கும். துருக்கியிலிருந்து படகுமூலம் காலிம்னோஸ் தீவு நோக்கி இவர்கள் பயணித்துள்ளனர். இதேவேளை, ரோட்ஸ் அருகே கடலில் மற்றுமொரு படகு கவிழ்ந்ததில் சிலர் பலியாகியுள்ளனர். சிரியாவில் ஐ.எஸ். ஆக்கிரமிப்பு பகுதியில் அரச படைகள் முன்னெடுக்கும் கடும் தாக்குதல்கள் காரணமாக அங்கிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். இதன்போது பலர் நடுக்கடலில் மூழ்கி பலியாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்கள் போராட்டம்-

88யாழ் முஸ்ஸிம் மக்கள் 1990ம் ஆண்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனை மறக்கவோ, மன்னிக்கவோ முடியாது என்னும் கருப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ் மாவட்ட முஸ்லிம் அமையத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவர்கள் எமக்கான நீதியினை பெற்றுத்தர வேண்டும் மற்றும் அதற்கான அணைக்குழுவொன்று வேண்டும், எமது மீள்குடியேற்றத்தில் அரச அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்ற முன்று அம்சக் கோரிக்கையை முன்வைத்திருந்தனர். இன்று யாழ் ஹொகதீன் பள்ளியில் நடைபெற்ற விஷேட தொழுகையினை தொடர்ந்து இவர்கள் கவனீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. .

சுங்க அதிகாரிகளுக்கு தொடர்ந்தும் விளக்கமறியலில்-

customs125 மில்லியன் ரூபாய் இலஞ்சம் கோரியதாக குற்றம்சாட்டப்பட்டு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்ட மூன்று சுங்க அதிகாரிகளையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுங்க அதிகாரிகளான சுஜீவ பராகிரம, ஜகத் குணதிலக்க மற்றும் எம்.டீ.யூ.ஜி.பெரேரா ஆகியோரே இவ்வாறு இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கடந்த 15ம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவர்களை இன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் 13ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவின் மோர்லன்ட் நகர மேயராக இலங்கைப் பெண் தெரிவு-

tamil girl australiaஅவுஸ்திரேலியாவின் மோர்லன்ட் நகர மேயராக இலங்கையரான சமந்தா ரட்ணம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் மோர்லன்ட் நகரத்தின் பசுமைக் கட்சி சார்பில் போட்டியிட்ட சமந்தா ரட்ணம், தொழிலாளர் கட்சியின் வேட்பாளரைத் தோற்கடித்து 6-5 என்ற வாக்குகளின் அடிப்படையில் வெற்றியீட்டியுள்ளார். முதன் முறையாக மோர்லன்ட் நகரில் சமந்தா ரட்ணத்தின் பசுமைக் கட்சி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இலங்கையில் பிறந்த சமந்தா ரட்ணம் 1987 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து வெளியேறி ஐரோப்பா மற்றும் கனடாவில் வசித்து பின்னர் 1989 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் குடியேறினார்.