ரஷ்ய விமானம் எகிப்தில் விழுந்து நொருங்கியது-
செங்கடல் பகுதியிலுள்ள ஷார்ம் எல் ஷெய்க்கிலிருந்து ரஷ்யாவின் பீட்டர்ஸ் பேர்க்குக்கு சென்று கொண்டிருந்த ரஷ்ய விமானமான ஏ 321, எகிப்தின் மத்திய சினாய் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதை எகிப்து பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார். 217 பயணிகள் மற்றும் 7 விமனப் பணியாளர்களுடன் சென்ற இந்த விமானம், சைப்பிரஸ் பகுதியில் காணமற்போனதாக அறிவிக்கப்பட்டு, சில மணிநேரங்களிலேயே மேற்கண்ட தகவலை எகிப்து பிரதமர் தெரிவித்துள்ளார். விமானத்தில் பயணித்தவர்களில் அதிகமானோர் ரஷ்யர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. எகிப்தின் ஷாம் எல் ஷேக் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சேர்த்து 224 பேருடன் ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரத்திற்கு குறித்த பயணிகள் விமானம் சென்றுள்ளது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் ரேடார் உடனான துண்டிப்பை இழந்துள்ளது. பின் சினாய் பகுதியில் விமானம் நொறுங்கி விழுந்துள்ளமை தெரியவந்தது. விபத்து குறித்து மேலும் விபரங்களை சேகரிப்பதற்காக எகிப்து பிரதமர் ஷெரீப் இஸ்மாயில், அமைச்சரவை குழு ஒன்றை அமைத்துள்ளார் என ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
மட்டக்களப்பு சிறைக்கைதிகளின் போராட்டம் நிறைவு-
மட்டக்களப்பு சிறையில் உள்ள கைதிகள் சிலர் நேற்றையதினம் சிறைச்சாலையின் கூரை மீதேறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தங்களுக்கான வசதிகளை மேம்படுத்தக் கோரி இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களை மட்டக்களப்பு மாவட்ட நீதிபதிகள் சந்தித்து, குறைகளை கேட்டு நிறைவேற்ற ஒழுங்கு செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 8 கைதிகள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் அவர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ எஸ். வியாழேந்திரன், நீதிபதிகளுடன் பேசி, எதிர்வரும் திங்கட்கிழமை இரண்டு தரப்புக்கும் இடையில் சந்திப்பை ஏற்படுத்த ஒழுங்கு செய்தார். இதனை அடுத்து அவர்கள் தங்களின் போராட்டத்தை கைவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாயம், சுமார் 80 குடும்பங்கள் இடம்பெயர்வு-
மண்சரிவு எச்சரிக்கை அபாயம் காரணமாக அம்பேவல வோர்விக் தோட்டத்திலுள்ள சுமார் 80 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். வோர்விக் தோட்டத்தில் நிலவும் அபாய நிலைமை காரணமாகவே இந்த குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட உதவி பணிப்பாளர் ஈ.எல்.எம். உதயகுமார தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் குறித்த பகுதியில் சீரற்ற வானிலை நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வோர்விக் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.