கருவி மாற்றுத் திறனாளிகளின் சமூகவள நிலைய அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்குவிப்பு உதவி-(படங்கள் இணைப்பு)
யாழ். நல்லூரடி முத்திரைச்சந்தியில் அமைந்துள்ள கருவி மாற்றுத் திறனாளிகளின் சமூகவள நிலையத்தில் அதன் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கான கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் இடம்பெற்றது. இந்நிகழ்வானது அவுஸ்திரேலிய தமிழ் பொறியியலாளர் அமைப்பின் அனுசரணையுடன் கருவி மாற்றுத் திறனாளிகளின் சமூகவள நிலையத் தலைவர் திரு. தர்மசேகரம் அவர்களது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டு மேற்படி கல்வி ஊக்குவிப்புக் கொடுப்பனவு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். நிகழ்வில் கருவி மாற்றுத் திறனாளிகளின் சமூகவள நிலைய செயலாளர் திரு. ஜசிந்தன் கனடாவிலிருந்து வருகை தந்துள்ள சமூக ஆர்வலர் திரு. கணேசலிங்கம் (வானொலி நிலைய இயக்குநர் கனடா) ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இங்கு உரையாற்றிய புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், இந்;தப் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி கருதி அவுஸ்திரேலியாவிலிருந்து மாதாந்தம் பத்துப் பிள்ளைகளுக்கான நிதியினை வழங்கி வருகின்றார்கள். இந்த சங்கம் இத்தகையதொரு உதவியினை வழங்கி வருகின்றமை வரவேற்கின்றேன். வெளிநாடுகளில் இலட்சக்கணக்கான எங்களுடைய மக்கள் வாழுகின்றார்கள். ஆனால் ஒரு சிலர்தான் மிகவும் வறுமைக்கோட்டின்கீழ் இங்கு வாழும் மக்களுக்கு உதவி வருகின்றார்கள். முக்கியமாக கல்விக்கான ஊக்குவிப்பு உதவியென்பது மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும். இந்த உதவியை அவர்கள் செய்து வருகின்றமையைப் பாராட்டுகின்றேன். மேலும் வெளிநாடுகளில் இருக்கின்ற எங்கள் உறவுகள் இப்படியான தேவைகள் உள்ள பிள்ளைகளை இனங்கண்டு அவர்களின் கல்விக்கு உதவ வேண்டும் என்றார்.