தமிழ் கைதிகளின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு-அமைச்சர் திலக் மாரப்பன-(படங்கள் இணைப்பு)
சிறைச்சாலைகளில் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அமைச்சர் திலக் மாரப்பன நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையில் முறையான சட்டங்கள் இருக்கின்ற போதிலும், நீதிமன்றங்களில், வழக்குகள் பத்து வருடங்களுக்கு மேல் இழுத்தடிக்கப்படுகின்ற வேடிக்கை நிகழ்வதாக, சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன நேற்று யாழ்ப்பாணத்தில் கூறியுள்ளார். சிறைச்சாலைகள் திணைக்களத்தினால், யாழ்ப்பாணத்தில் 272 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறைச்சாலை கட்டிடத்தை வைபவ ரீதியாகத் திறந்து வைத்த பின்னர், உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். புலிகள் இயக்க சந்தேகநபர்கள் என்பதற்காக அவர்களுக்கென வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியமில்லை. நீண்ட நாட்களாக சிறையிலிருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும். அல்லது பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும். ஏனென்றால் யுத்தம் முடிந்துவிட்டது, இப்பொழுது அவர்களால் அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூற முடியாது. அவ்வாறு எவரேனும் அச்சுறுத்தலாக இருப்பார்களாயின் அவர்களுக்கு கடும் நிபந்தனைகள் விதித்து அவர்களைக் கண்காணிக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார். இதேநேரம் தமிழ்க் கைதிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியும், பிரதமரும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிகழ்வில் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ. சரவணபவன், மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பாராளுமன்ற உறுப்பினர், கே.என். டக்ளஸ் தேவானந்தா,, சிறைச்சாலை ஆணையாளர் நாயகம், பொலிஸ் மா அதிபர் எம்.கே. இலங்ககோன், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன், பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராசா, மற்றும் அமைச்சின் செயலாளர்கள், முப்படைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.