ரஷ்ய விமானத்தின் கருப்புப் பெட்டி கிடைத்தது-
எகிப்து நாட்டில் உள்ள சினாய் கோஸ்டல் ரிசார்ட்டில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்கிற்கு 217 பயணிகள், 7 ஊழியர்களுடன் நேற்று புறப்பட்டுச் சென்ற பயணிகள் விமானம் 23 நிமிடங்களில் மத்திய சினாய் பகுதியில் விழுந்து நொறுங்கியது. செங்கடலை ஒட்டியுள்ள கடற்கரை நகரமான ஷர்ம்-அல்-ஷேக் நகரில் இருந்து திரும்பிய அந்த விமானத்தில் இருந்தவர்கள் பெரும்பாலும் ரஷிய நாட்டு சுற்றுலா பயணிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 17 குழந்தைகள் உட்பட விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகியிருக்கலாம் என வெளிநாட்டு ஊடகச்செய்திகள் குறிப்பிடுகின்றன. இந்நிலையில் எகிப்தில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தாங்கள் தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கோரச் சம்பவத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள எகிப்து அதிகாரிகள் விபத்துக்குள்ளான விமானத்தின் இரு கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பூஜித்த ஜெயசுந்தர பதில் பொலிஸ் மா அதிபராக நியமனம்-
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் உகாண்டாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமையே இதற்குக் காரணம் என, தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி இன்று முதல் எதிர்வரும் ஐந்தாம் திகதிவரை பூஜித்த ஜெயசுந்தர பதில் பொலிஸ் மா அதிபராக கடமைகளை மேற்கொள்ளவுள்ளார். மேலும் ஐந்தாம் திகதிக்குப் பின்னர் பதில் பொலிஸ் மா அதிபராக ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க செயற்படுவார் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் நாளொன்றுக்கு 650 கருக்கலைப்புக்கள்-
இலங்கையில் நாளொன்றுக்கு சராசரியாக 650க்கும் அதிகமான கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சின் குடும்பநல மருத்துவப் பிரிவு கூறியுள்ளது. அதேவேளை இலங்கையில் 77 வீதமான கருத்தரிப்புகள் எதிர்பாராத கருத்தரிப்புகள் என்று சம்பந்தப்பட்டவர்களால் கருதப்படுவதாகவும் தமது ஆய்வுகள் கூறுவதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து பிபிசியிடம் பேசிய கிழக்கு மாகாண சமூகநல மருத்துவ நிபுணரான டாக்டர் எஸ்.அருள்குமரன், கருக்கலைப்புக்கள் 1000 என்ற எண்ணிக்கையில் இருந்து தற்போது 650ஆக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். கருக்கலைப்புகள் மருத்துவ காரணங்களுக்காக மாத்திரமே அரச மருத்துவமனைகளில் நடப்பதாகவும், ஆனாலும் சில சட்டவிரோத நிலையங்கள் இதற்காக செயற்படுவதாகவும், அவற்றின்மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் சமூகநல மருத்துவ நிபுணரான டாக்டர் எஸ்.அருள்குமரன், குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தாய்லாந்து பயணம்-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நான்கு நாட்கள் உத்தியோகப்பபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று தாய்லாந்துக்கு பயணமாகியுள்ளார். இரு நாடுகளுக்கிடையே இராஜதந்திர உறவுகள் தொடங்கி 60 ஆண்டுகள் நிறைவடைவதை குறித்தான நிகழ்வுக்கு, தாய்லாந்து பிரதமரின் அழைப்பையேற்றே ஜனாதிபதி தாய்லாந்துக்கு பயணமாகியுள்ளார். இவ்விஜயத்தின்போது, இரு நாட்டு தலைவர்களுக்கிடையேயும் பொருளாதார, சமூக மற்றும் மத உறவுகள் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு கூறியுள்ளது.
இலங்கையில் மதச்சுதந்திரம் முக்கியமானது–அமெரிக்கா-
இலங்கையில் மதச்சுதந்திரம் மிகவும் முக்கியமானது என்று அமெரிக்காவின் தூதுவர் அத்துல் கசாப் தெரிவித்துள்ளார். கொழும்பு கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்துக்கு சென்றிருந்த அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனைக் கூறியுள்ளார். அமெரிக்காவில் மத சுதந்திரத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையே அந்த நாட்டின் மிகப்பெரிய சக்தியாக காணப்படுகிறது. இலங்கையிலும் பல மதத்தவர்கள் உள்ள நிலையில், அவர்கள் தங்களின் நம்பிக்கைகளை முன்கொண்டு செல்வதற்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்று அத்துல் கசாப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.