ஜனாதிபதி தாய்லாந்து பிரதமர் சந்திப்பு-

maithri thailand prime ministerஉத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தாய்லாந்து சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்து பிரதமரை சந்தித்துள்ளார். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தாய்லாந்து சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பியுன் ஷான் ஓஷாவை இன்று காலை சந்தித்துள்ளார். இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு முன்பதாக இரு தலைவர்களுக்கும் பாதுகாப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம், அரசியல், கலாசாரம் மற்றும் மத ஒத்துழைப்புக்களை மேம்படுத்தும் நோக்கில் தாய்லாந்து பிரதமரின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி அங்கு சென்றுள்ளார். சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் இரு தரப்பு ஒத்துழைப்புக்களை அதிகரிப்பதும் இந்த விஜயத்தின் நோக்கம் என தாய்லாந்து தெரிவித்துள்ளது. இரு நாடுகளுமிடையில் இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று தாய்லாந்தை சென்றடைந்த ஜனாதிபதி நாளை மறுதினம் நாடு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்டோர் விசாரணைக்கு அழைப்பு-

policeமேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காமினி மதுரட்ட ஆகியோர் இன்று தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். கடந்த 29ஆம் திகதி கொழும்பு வோட் ப்ளேசில் அமைந்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் நடந்து கொண்ட விதம் தொடர்பில் விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார். விசாரணையின்போது பொலிஸ் அதிகாரிகள் எவரேனும் தவறிழைத்திருப்பின் அவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சிறி ஹெட்டிகேயின் ஆலோசனைக்கு அமைய விசாரணை நடைபெறுவதாக ஆணைக்குழுவின் செயலாளர் குரே சுட்டிக்காட்டியுள்ளார். ஆர்ப்பாட்டம் நடைபெற்ற விதத்தினை வெளிப்படுத்தும் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் வெளிவந்த காட்சிகள், புகைப்படங்களை ஆதாரமாகக் கொண்டு விசாரணை இடம்பெறவுள்ளது. இதேவேளை எச்.என்.டீ.ஏ மாணவர்கள்மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிராக இன்று தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர தெரிவித்தார். இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

மாலைதீவு ஜனாதிபதி படகில் வெடிப்பு – சந்தேகநபர் தெகிவளையில் கைது-

maldivesகடந்த செப்டம்பர் மாதம் மாலைதீவு ஜனாதிபதியின் அதிவேகப் படகில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் தேடப்பட்டு வந்த 8பேரில் ஒருவர், நேற்று கொழும்பு தெகிவளை நெதிமலயில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். மாலைதீவு துணை ஜனாதிபதியின் நெருங்கிய ஆதரவாளர் என தன்னைக் காட்டிக் கொண்டவரும் சமூக வலைத்தளங்களில் ஷூம்பா கொங்க் என அறியப்பட்டவருமான அஹமட் அஸ்ரவ் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கைது செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், தனது ட்விட்டர் சமூக வலைத்தளத்தில், “சிலர் எனது அறைக்கதவை உடைத்துக் கொண்டு வர முயற்சிக்கின்றனர். அல்லா எம்மை காப்பாற்றக் கூடும்” என பதிவிட்டுள்ளார். இதேவேளை பொலிஸார் அவர் கைதுசெய்யப்பட்டதை உறுதிசெய்துள்ள போதிலும், எப்போது சந்தேகநபர் மாலைதீவிற்கு நாடு கடத்தப்படுவார் என்பது தொடர்பான எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. இதேவேளை விசா சட்டங்களை மீறி நாட்டில் ஒருவர் தங்கியிருப்பதாக மாலைதீவு தூதரகம் அறிவித்ததை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் லக்ஷான் டயஸ் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்டபின் சந்தேகநபர் இலங்கையிலுள்ள மாலைதீவு தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இன்று முற்பகல் சந்தேகநபர் மாலைத்தீவிற்கு நாடுகடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் கூறியிருந்தது.

கராத்தே வீரர் வசந்த சொய்சா கொலை தொடர்பில் 28பேர் கைது-

vasantha soysaகராத்தே வீரர் வசந்த சொய்சா கொலை தொடர்பில் இதுவரை 28 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது. சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான எஸ்.எப்.லொக்கா நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை 24 மணிநேரம் தடுத்துவைத்து விசாரணை செய்ய அநுராதபுரம் மேலதிக நீதவான் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளார். கொலையுடன் தொடர்புடைய எஸ்.எப்.லொக்காவின் சகோதரர் மற்றும் ஹோட்டல் உரிமையாளர் ஒருவரையும் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வசந்த சொய்ஸாவின் கொலைச்சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். அநுராதபுரம் முதித்தா மாவத்தையில் அமைந்துள்ள இரவு நேர களியாட்ட விடுதியில் கடந்த 24ஆம் திகதி இரவு வசந்த சொய்ஸா கொலை செய்யப்பட்டிருந்ததுடன் இதன்போது ஏற்பட்ட மோதலில் இரவு விடுதியின் முகாமையாளர் உள்ளிட்ட மூவர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையரசு இணைந்து செயற்படும் மனோநிலையில் இல்லை-வியட்னாம் தூதுவர்-

vietnam and chiefஇலங்கை அரசாங்கம் தங்களுடன் நடந்து கொள்வதில் தாமதத்தையும், இணைந்து முன்னேற வேண்டிய மனோநிலையிலும் அவர்கள் இல்லை என வியட்னாம் தூதுவர் வட மாகாண முதலமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளார். யுhழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான வியட்னாம் தூதுவர் பான் கியு து, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் வியட்னாம் தூதுவரின் வருகை தொடர்பில் வடக்கு முதல்வர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், வியட்னாம் தூதுவரின் பயணம் வடமாகாணத்திற்கான முதற் பயணமாக உள்ளது. அரசியல் காரணங்களுக்காகவும், வடமாகாணத்திற்கு வருகை தந்தால் பிரச்சினைகள் ஏற்படும் என்பதற்காகவுமே இதுவரை காலமும் வடமாகாணத்திற்கான பயணத்தினை மேற்கொள்ள முடியவில்லை என்று வியட்னாம் தூதவர் தனது ஆதங்கத்தை என்னிடம் வெளிப்படுத்தினார். தீர்மானத்தை உடனுக்குடன் எடுக்கவேண்டிய குணாதிசயம் இருக்க வேண்டும். அதனூடே இலக்குகளை நோக்கி முன்னேற முடியும் எனவும் அவர் எடுத்துரைத்தார். யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக்க வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியதுடன் தமது நாட்டின் ஒத்துழைப்பு இலங்கைக்கு எப்போதும் இருக்கும் என்றும் அவர் என்னிடம் கூறினார் என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச பொலிஸாருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்-

nk illangakoonபொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் சர்வதேச பொலிஸாருடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடவுள்ளதாக, தெரியவருகின்றது. உகண்டாவில் இடம்பெறும் சர்வதேச பொலிஸ் மாநாட்டிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. உகாண்டாவில் இடம்பெறும் வருடாந்த சர்வதேச பொலிஸ் மாநாட்டில் பல நாடுகளின் பொலிஸ் பிரதானிகள் கலந்து கொள்கின்றனர். இதன்படி இலங்கை சார்பில் இதில் கலந்து கொள்ள பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் நேற்று அதிகாலை உகாண்டாவுக்கு புறப்பட்டுச் சென்றிருந்தார்.

தாயகத்திற்கு வந்து சேவை செய்யுமாறு ஜனாதிபதி அழைப்பு-

maithriநாட்டினுள் சுதந்திரம், ஜனநாயகத்தை உறுதி செய்துள்ளதாகவும் மீண்டும் தாய் நாட்டுக்கு வந்து தங்கள் சேவையை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்து வாழ் இலங்கையர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தாய்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அங்குள்ள இலங்கையர்களை சந்தித்த வேளையே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நேற்று மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அத்துடன் தாய்லாந்தின் இலங்கைக்கான தூதுவராலயத்தால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் வர்த்தகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

வட மாகாண சபை முதலமைச்சரால் சுழிபுரம் அண்ணா முன்பள்ளி திறந்து வைப்பு-(படங்கள் இணைப்பு)

SAM_0249யாழ். சுழிபுரம் பெரியபுலோப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்ப்ட அண்ணா முன்பள்ளி வட மாகாண முதலமைச்சர் கௌரவ. சிவி. விக்னேஸ்வரன் அவர்களால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நகரஞ்சினி ஐங்கரன், சங்கானைப் பிரதேச செயலர் திரு. அ.சோதிநாதன், உதவித்தி;மிடல் பணிப்பாளர் வீ.சிவகுமாரர், அப் பகுதிக் கிராம சேவகர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்துக்கொண்டனர். 

SAM_0249 SAM_0251 SAM_0254 SAM_0256 SAM_0258 SAM_0264 SAM_0267 SAM_0272