ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்து இளவரசி சந்திப்பு-
தாய்லாந்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த நாட்டின் முடிக்குரிய இளவரசி மகா ஷக்ரி சிரிந்தோனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு தாய்லாந்தின் ஸ்ரா பத்தும் மாளிகையில் இடம்பெற்றுள்ளது. தாய்லாந்து முடிக்குரிய இளவரசியினால் இதன்போது ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. விருந்தினரை உபசரிப்பதில் இலங்கை சிறந்து விளங்குவதாக இதன்போது தாய்லாந்து இளவரசி பாராட்டு தெரிவித்துள்ளார். இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகளுக்கு 60 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு, தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயூத் ச்சான்_ஓ_ச்சாவின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த முதலாம் திகதி அந்நாட்டிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். தாய்லாந்திற்கான தமது நான்கு நாள் விஜயத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், தாய்லாந்து பிரதமருடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி ஈடுபட்டார். இதனையடுத்து, பேங்கொக்கில் இடம்பெற்ற இலங்கை தாய்லாந்து வர்த்தக மாநாட்டிலும் கலந்துகொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றினார்.
பிள்ளையானை தொடர்ந்தும் காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி-
கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுறை சந்திரகாந்தனை டிசம்பர் 10ம் திகதி வரை தொடர்ந்தும் காவலில் வைத்து விசாரிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசெப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் இவருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதன்படி கடந்த மாதம் 11ம் திகதி வாக்கு மூலத்தைப் பதிவு செய்ய பிள்ளையான் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் கைதுசெய்யப்பட்டார். இதனையடுத்து இன்று வரை அவரை காவலில் வைத்து விசாரிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கருத்தில் கொண்டு கொழும்பு பிரதம நீதவான் டிசம்பர் 10ம் திகதி வரை தொடர்ந்தும் அவரை காவலில் வைத்து விசாரிக்க இன்று அனுமதியளித்துள்ளார்.
அரசியல் கைதிகளுக்கு சாட்சியம் இல்லை – சீ.வி. விக்னேஸ்வரன்-
அரசியல் கைதிகளுக்கான சாட்சியம் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இல்லை. அதனாலேயே காலம் தாமதிக்கின்றார்கள் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அரசியல் உள்ளீடு இருக்கும் போது, சட்டமா அதிபரை குற்றம் சாட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாததென்றும் நீதி அமைச்சரின் கருத்தை முற்றாக மறுப்பதாகவும் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்று யாழிற்கு விஜயம் மேற்கொண்ட நீதியமைச்சர் அரசியல் கைதிகளின் விடுதலை சட்டமா அதிபர் கையில் இருப்பதாக தெரிவித்திருந்தார். முதலமைச்சர் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, இது குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர்கள் முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளிக்கையிலேயே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அரசியல் கைதிகளின் விடுதலைக்கு காலம் எடுப்பதற்கான காரணம் அரசியல் கைதிகளுக்கான சாட்சியம் அங்கு இல்லை. அதனால் தான் அரசாங்கம் சாட்சியங்களை பெற முயற்சிக்கின்றது. சாட்சியங்களைப் பெற்றால் அரசியல் கைதிகளுக்கு எதிராக வழக்கினை பதிவு செய்யக் கூடியதாக இருக்கும் என்றார். எனவே, அரசியல் ரீதீயாக கைதுசெய்யப்பட்ட அனைத்து கைதிகளுக்கும் அரசியல் ரீதியான தீர்மானத்தினைத் தரவேண்டும். அந்த தீர்மானம் எதிர்வரும் 07ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு வீ.ஆனந்தசங்கரி கோரிக்கை-
பல ஆண்டுகளாக சிறையில் வாடும் 200 தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் ஒன்றின் மூலமே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இந்தக் கைதிகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் நவம்பர் மாத முதல் வாரத்தில் அரசியல் கைதிகள் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது எனவும் அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இதுபோன்ற சம்பவங்களில் இவ்வாறான விடுதலை கடந்த காலங்களில் நடந்துள்ளன என குறிப்பிட்டுள்ள சங்கரி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் சில தமிழ் அமைப்புக்களுக்கு 1980ம் ஆண்டு காலப்பகுதியில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதையும் நினைவுகூர்ந்தார். ஏதாவது காரணத்துக்காக சிலரை கடுமையான குற்றங்களை இழைத்தவர்கள் என கருதினால் அவர்களை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பிவைக்கலாம், எனவும் அவர் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குமார் குணரட்ணம் கைதாகி விளக்கமறியலில்-
முன்னலை சோசஸிஸ கட்சியின் அரசியல்துறை உறுப்பினர் குமார் குணரட்ணம் கைதுசெய்யப்பட்டார். கேகாலை அகுருகெல்ல பகுதியில் வைத்து பொலிஸாரால் இவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் குமார் குணரட்ணம் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்தே இவரை எதிர்வரும் 18ம்திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அரச உத்தியோகத்திற்காக வயதெல்லையை அதிகரிக்க யோசனை-
அரசாங்க உத்தியோகத்திற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள வயதெல்லையை மேலும் 10 வருடங்கள் அதிகரிக்கும் யோசனை ஒன்றை அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாக, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். தற்போது அரசாங்க உத்தியோகத்திற்கான அதிகபட்ச வயதெல்லை 30 தொடக்கம் 35 வரையாக உள்ளது. இதனால், சிலருக்கு தொழிலைப் பெறும் வயது பிரச்சினையாக இருப்பதால் தொழிற்படையில் சேர முடியால் உள்ளதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார். மக்களுக்கு சாதகமான வகையில் தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மதுகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே ராஜித்த மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
வவுனியா இந்து மயானத்தில் ஆயுத தேடுதல் நடவடிக்கை-
வவுனியா, பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வவுனியா பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் அகழ்வுப்பணியை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். யாழ். மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வவுனியா நீதிவான் வி.இராமக்கமலனின் அனுமதியைப் பெற்று, வவுனியா பொலிஸாரின் உதவியுடன், குறித்த மயானத்தில் அகழ்வுப்பணிகள், இன்று இடம்பெற்று வருகின்றன. இந்து மயானத்தில் 3 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தொல்பொருள் ஆய்வுத்திணைக்கள அதிகாரிகள், கிராம சேவகர், சமாதான நீதிவான் முன்னிலையில் இவ் அகழ்வுப்பணிகள் இடமபெற்று வருகின்றன.
மற்றுமொரு ரஸ்ய விமான விபத்தில் பலி உயிரிழப்பு-
தென்சூடானின் தலைநகரான ஜூபாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 40 பேர் வரை உயிரிழந்துள்ளனர். சரக்கு விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானம் புறப்பட்டு சிறிது நேரத்திலேயே விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானம் ரஸ்ய தயாரிப்பென தெரிவிக்கப்படுகின்றது. ஓடு பாதையிலிருந்து 800 மீற்றர் தூரத்திலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவத்தில் உயிரிழந்தோரில் விமானத்தினுள் இருந்தவர்கள் எத்தனை பேர் மற்றும் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்தவர்கள் எத்தனை பேர் என்பது இருவரை தெரியவரவில்லை.