புற்றுநோய்க்கு எதிராக மட்டக்களப்பில் வீதி ஊர்வலம்-

Captureபாதுகாப்பான சமூகத்தினை கட்டியெழுப்பும் வகையில் மாபெரும் ஊர்வலம் ஒன்று இன்றுகாலை மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட களுதாவளை பகுதியில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட எகட் கரித்தாஸ் மற்றும் மாவட்ட விவசாய திணைக்களம் இணைந்து இந்த கவன ஈர்ப்பு பேரணியை நடத்தினர். புற்றுநோய் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் உள்ள மாவட்டம் என மட்டக்களப்பு மாவட்டம் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. மரக்கறிகளுக்கு பாவிக்கப்படும் இரசாயண பதார்த்தங்களின் தாக்கங்கள் காரணமாகவே அதிகளவில் இந்த புற்றுநோய் தாக்கம் ஏற்படுவதாக அண்மையில் சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது. சேதனைப்பசளையை பயன்படுத்தி விவசாய நடவடிக்கையினை மேற்கொள்வதை வலியுறுத்தியும், இரசாயணங்கள் விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதனால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பிலும் இந்த பேரணியின்போது விழிப்புணர்வூட்டப்பட்டது. அத்துடன் குடும்பத்தினை நோயற்ற குடும்பமாக கட்டியெழுப்பும் வகையில் வீட்டுதோட்ட செய்கை தொடர்பிலும் இங்கு விழிப்புணர்வூட்டப்பட்டது. மட்டக்களப்பு, ஆயித்தியமலை, களுவாஞ்சிகுடி ஆகிய பிரதேசங்களில் இருந்து பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டனர். பேரணியல் கலந்துகொண்டோர் நச்சு பதார்த்தங்களினால் ஏற்படும் தாக்கங்கள் தொடர்பிலான பதாகைகளை ஏந்தியிருந்தனர். ஊர்வலத்தினை தொடர்ந்து களுதாவளை கலாசார மண்டபத்தில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.