அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி கூட்டமைப்பு எம்.பி.கள் கடிதம்-

tna (4)நாளை 7ஆம் திகதிக்கு முன்பாக அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்து, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கூட்டமைப்பு எம்.பி.க்கள் அவசர கடிதம் எழுதியுள்ளனர். கூட்டமைப்பைச் சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பமிட்டு நேற்று இந்த கடித்ததை கையளித்துள்ளனர். ‘அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, பல தடவைகள் தங்களின் கவனத்துக்கு நாங்கள் கொண்டு வந்துள்ளோம். ஆனால் இன்றுவரை அவர்களின் விடுதலை தொடர்பாக தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டு நிரந்தரமான தீர்வு எட்டப்படவில்லை. கைதிகளின் விடுதலை தொடர்பில் பலரும் முரண்பட்ட கருத்துகளை தெரிவித்து வந்தாலும் கூட, தங்களின் உண்மையான நிலைப்பாட்டை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே எமது மக்களின் எதிர்பார்ப்பாகும். கைதிகள் தமது உடனடி விடுதலையை வலியுறுத்தி 12.10.2015 அன்று ஆரம்பித்த சாகும் வரையிலான உண்ணாநிலை போராட்டம், 17.10.2015 வரை தொடர்ந்தபோது தாங்கள், அரசியல் கைதிகளும் அவர்களது குடும்பங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை நவம்பர் 7க்கு முன்பாக பெற்றுக்கொடுப்பதாக கூறிய வாக்குறுதியை நம்பி, எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தன், தங்களின் வாக்குறுதியை கைதிகளுக்கு தெளிவுபடுத்தியதன் காரணமாக தற்காலிகமாக உண்ணாநிலை போராட்டத்தை அரசியல் கைதிகள் முடிவுக்கு கொண்டு வந்திருந்தனர். ஆனால், இன்றுவரை கைதிகளின் விடயத்தில் எவ்விதமான முன்னேற்றமும் காணப்படவில்லை. பல ஆண்டுகளாக பல்வேறு துன்பங்களோடு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த தமிழ் மக்கள், இவ்வாண்டு ஜனவரி 8 அன்று ஒன்றுசேர்ந்து ஜனநாயக ரீதியாக ஒரு புரட்சியை ஏற்படுத்தி தங்களின் தலைமையில் ஒரு நல்லாட்சி புதிய அரசாங்கத்தை உருவாக்கியுள்ளார்கள். இந்த நல்லாட்சியில் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளில் ஒன்றாகிய அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு இன்றுவரை முடிவு காணாமலிருப்பது எமக்கு மிகுந்த அவநம்பிக்கையையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்துகின்றது. 8 முதல் 20 வருடங்களாக நீதிக்கு புறம்பாக சிறைச்சாலைகளில் வதைபடும் எமது உறவுகளான அரசியல் கைதிகளின் பிரச்சினையை மனிதாபிமான ரீதியில் அணுகி, விரைவாக ஒரு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்’ என அந்த கடித்தில் கூறப்பட்டுள்ளது. 
புத்துவெட்டுவான் கிராம வறிய குடும்பங்களுக்கு மாகாணசபை உறுப்பினர் உதவி-
IMG_2380முல்லைத்தீவு புத்துவெட்டுவான் கிராமத்திலுள்ள வறிய குடும்பங்களுக்கான வாழ்வாதாரத் திட்டத்தின் ஊடாக ஆடுகள், கோழிக்குஞ்சுகள் மற்றும் கோழிக்கூடுகள் என்பன புத்துவெட்டுவான் கால்நடை அபவிருத்தி திணைக்களத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இதன்படி வுட மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் (பவன்) அவர்களின் பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியிலிருந்து பத்துக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் இன்றுகாலை 10மணியளவில் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இதில் ஐந்து குடும்பங்களுக்கு ஆடுகளும், ஐந்து குடும்பங்களுக்கு கோழிக்குஞ்சுகள் மற்றும் கோழி வளர்ப்பதற்கான கூடுகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன், கழக முக்கியஸ்தர் திரு. பாலசுப்பிரமணியம், பாண்டியன்குளம் பிரதேசசபை முன்னாள் உறுப்பினர் திருமதி சரஸ்வதி, கால்நடை வைத்திய அதிகாரி மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

IMG_2380 IMG_2386 IMG_2387 (1)IMG_2391 IMG_2396 IMG_2404 IMG_2418 IMG_2420 IMG_2423 IMG_2428