வன்னி மேம்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவில் உதவிகள்

image_7imageமுல்லைத்தீவு மன்னகண்டல் வசந்தபுரத்தில் வன்னி மேம்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நேற்று (04.11.2015) காலை 10.30 மணியளவில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் மற்றும் வன்னி மேம்பாட்டுக் கழக முக்கியஸ்தர்களினால் பெண் தலைமைத்துவ மற்றும் வறிய குடும்பங்களுக்கு நல்லினக் கறவை மாடுகள் வழங்கிவைக்கப்பட்டன. இவ்வாறு ஆறு குடும்பங்களுக்கு ஆறு கறவை மாடுகள் காப்புறுதியுடன் வழங்கிவைக்கப்பட்டன. புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வசிக்கும் தோழர் மாசிலாமணி மகேந்திரராஜா அவர்களின் ஐம்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய அனுசரணையில் இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் (பவன்), வன்னி மேம்பாட்டுப் பேரவைத் தலைவர் திரு. தவராஜா, வன்னி மேம்பாட்டுப் பேரவைச் செயலாளர் செல்வி ராஜலட்சுமி, வன்னி மேம்பாட்டுப் பேரவைச் மத்தியகுழு உறுப்பினர்கள், கால்நடை வைத்திய அதிகாரி, கால்நடை சங்கத் தலைவர் மற்றும் காப்புறுதி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன், இதன்போது வசந்தபுரத்திலுள்ள ஆரம்ப பாடசாலைச் சிறார்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது. மேற்படி வசந்தபுரம் கிராமம் 1977ம் ஆண்டு கலவரத்தின்போது இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்ட கிராமமாகும்.

மேலும் செய்திகளை வாசிக்கஜனாதிபதி ஆணைக்குழு யாழ்ப்பாணத்திற்கு விஜயம்-

யாழ் மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள, காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு யாழ்ப்பாணத்திற்குச் சென்றுள்ளது. அதன்படி எதிர்வரும் 11ம் திகதி முதல் இரண்டு வாரகாலம் அந்த மாவட்ட முறைப்பாட்டாளர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நல்லூர் மற்றும் யாழ் பிரதேச செயலகங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியூ. குணதாஸ தெரிவித்துள்ளார். அந்த மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற 2580 முறைப்பாடுகளில் தெரிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் இந்தக் காலப் பகுதியில் விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மீனவர்களை காப்பாற்றிய அமெரிக்க கடற்படை-

தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுக்கடலில் காணாமல்போன இலங்கை மீனவர்கள் சிலரை அமெரிக்க கடற்படை பாதுகாப்பு குழுவொன்று மீட்டுள்ளது. நேற்றிரவு இந்திய பெருங்கடல் பகுதியில் நிர்க்கதிக்குள்ளான நிலையில் இலங்கைக் கொடியுடன் காணப்பட்ட படகில் இருந்த 06 இலங்கை மீனவர்கள் இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்வர்கள் 300 மைல் கடற்தொலைவில் உணவு நீர் எதுவும் உட்கொள்ளாத நிலையில் செய்வதறியாது நிர்க்கதிக்கு உள்ளாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அந்த மீனவர்கள் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான போராட்டத்தில் காணப்பட்டதாகவும், அதனையடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை ஏற்படுத்திக் கொடுத்து, உணவு பானங்கள் வழங்கியதாகவும் சர்வதேச தகவல்கள் கூறுகின்றன. மீட்கப்பட்ட இலங்கை மீனவர்களும் தற்பொழுது நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா பாடநெறி தரமுயர்வு-

கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா பாடநெறி பி.கொம் பட்டத்திற்கு சமனானதாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக குறித்த பாடநெறியை பி.கொம் (டீ.ஊழஅ) பட்டத்திற்கு சமனானதாக தரம் உயர்த்துமாறு வலியுறுத்தி மாணவர்கள் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் குறித்த பாடநெறியை தரம் உயர்த்துவது தொடர்பான ஒரு சுற்றரிக்கை அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு அமைச்சரவை அனுமதியளித்தால் அவ்வாறு தரம் உயர்த்த முடியும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் குணரத்ன தெரிவித்திருந்தார். அதன்படி குறித்த சுற்றரிக்கைக்கு இன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பீல்ட் மார்ஷல் பொன்சேக்காவுக்கு எதிராக அமைச்சர் வழக்கு-

பீல்ட் மாஷல் சரத் பொன்சேகாவிடம் 500 மில்லியன் ஷரூபா நட்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எவன்காட் சம்பவத்தின் மூலம் விஜயதாஸ ராஜபக்ஷ இலஞ்சம் பெற்றதாகவும், அவர் ஒரு திருடன் என்றும் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா நேற்று தெரிவித்திருந்தார். பொன்சேகாவின் இந்தக் கூற்று தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும், அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தனது சட்டத்தரணிகளின் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எவன்காட் சம்பவம் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளரை கைது செய்யுமாறு சரத் பொன்சேகா என்னை வற்புறுத்தி வருகிறார். அவ்வாறு கைது செய்யாமையின் காரணமாகவே என்மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார். போதிய ஆதாரங்கள் இன்றி எவரையும் கைது செய்ய முடியாதென எவன்காட் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை நான் தெளிவுபடுத்தியுள்ளேன். ஜயந்த கெட்டகொடவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்து அவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக் கொள்ள உதவி புரியாமை மற்றும் அவருக்கு வேண்டாதவர்களை கைது செய்யாமை போன்ற காரணங்களுக்காவே என்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார். பதவிகள் கிடைத்தவுடன் பழையவற்றை சரத் பொன்சேகா மறந்துவிட்டார் என அமைச்சர் விஜயதாச மேலும் குறிப்பிட்டுள்ளார்.