வெள்ளநீர் புகுந்ததால் சிலாபம் வைத்தியசாலை நோயாளர்கள் இடமாற்றம்-
மழை வெள்ள நீர் உட்புகுந்ததால் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் சிலரை வேறு வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சிலாபம் வைத்தியசாலையின் அறை இலக்கம் 04 மற்றும் தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளர்கள் இவ்வாறு இடம் மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளர்கள் தேசிய வைத்தியசாலைக்கும் ஏனைய அறைகளில் இருந்த நோயாளர்கள் மாரவிலை மற்றும் குளியாப்பிட்டிய வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதுதவிர மழை வெள்ளம் காரணமாக சிலாபம், மாதம்பை மற்றும் முந்தலம் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் சுமார் 500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் சிலாபம் முன்னேஸ்வரம், நல்லநாயகம் குளத்தின் அணைக்கட்டு அபாய நிலையில் இருப்பதனால் அதற்கு மண் மூடைகளை நிரப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் கூறுகிறது.