தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் ஏழாவது நாளாக தொடர்கிறது-

jailதமது விடுதலையை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் இன்று 7ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் தமது விடுதலை தொடர்பில் இறுதியான தீர்மானம் எடுக்கப்படவேண்டுமென வலியுறுத்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரத்ததில் ஈடுபட்டிருந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த கைதிகள் சிலர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று நேற்று வெளியேறியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன புஷ்பகுமார கூறியுள்ளார். இதேவேளை, சில நாட்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 32 பேரில் 24 தமிழ் கைதிகள், அவர்களுக்கான பிணை நிபந்தனைகளை பூர்த்திசெய்த பின்னர் உறவினர்களால் பொறுப்பேற்கப்பட்டு சிறைச்சாலையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். பிணை வழங்கப்பட்டுள்ளவர்களில் பெண் ஒருவர் உட்பட எஞ்சியுள்ள தமிழ் கைதிகளை, எதிர்வரும் திங்கட்கிழமை பிணை நிபந்தனைகளைப் பூர்த்திசெய்த பின்னர் அவர்களின் உறவினர்களால் அழைத்துச் செல்லப்படுவார்கள் என எதிர்ப்பார்ப்பதாகவும் ரோஹண புஷ்பகுமார மேலும் கூறியுள்ளார். இதேவேளை, தமிழ் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நேற்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் காரணமாக 2 மாகாணங்களிலும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருந்ததுடன், பொது மற்றும் தனியார் துறைகள், வர்த்தக நடவடிக்கைகள் உட்பட அனைத்து செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்திருந்தது.