ஜனாதிபதி மோல்டாவிற்கு விஜயம்-

commonwealth24ஆவது பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மோல்டாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். எதிவரும் 26ம் திகதி ஜனாதிபதி அங்கு செல்லவுள்ளார். பொதுநலவாய நாடுகளுக்கு இலங்கையே தலைமை தாங்குகிறது. இந்நிலையில் இந்த மாநாட்டில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், பொதுநலவாய நாடுகளின் அடுத்த தலைவர் பதவி, மோல்டாவுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த மாநாடு எதிர்வரும் 26ம் திகதி முதல் 29ம் திகதி வரையில் மோல்டாவில் நடைபெறவுள்ளது. பொதுநலவாய தலைவர்களின் முதலாவது மாநாடு 1971 இல் சிங்கப்பூரில் நடைபெற்றது. இம் மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை அவ் அமைப்பின் உறுப்பு நாடு ஒன்றில் இடம்பெறும். மேலும் குறித்த மாநாடு நடைபெறும் நாட்டின் அரச தலைவர், பிரதமர் அல்லது ஜனாதிபதி மாநாட்டுக்குத் தலைமை வகிப்பதோடு, அடுத்த இரு ஆண்டுகளுக்கு அவரே பொதுநலவாய நாடுகள் அமைப்பின் நடப்புத் தலைவராகவும் செயல்படுவார். இதன்படி கடந்த 2013ம் ஆண்டு கொழும்பில் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. இதன்படி பொதுநலவாய அமைப்பின் தற்போதைய தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆவார். இந்நிலையில் விரைவில் அந்தப் பதவி மோல்டா அரசுக்கு செல்லவுள்ளது. இம்முறை மாநாட்டில் இங்கிலாந்தின் மகாராணியும் கலந்துகொள்ளகின்றார்.

பிரித்தானிய பாராளுமன்றக்குழு மட்டக்களப்புக்கு விஜயம்-

britishபிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜென்னி டொங்கே தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவினர் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்துள்ளனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்ற இவர்கள் இனப் பெருக்க மற்றும் பாலியில் சுகாதாரம் தொடர்பான மீளாய்வு சந்திப்பில் கலந்து கொண்டனர். வைத்தியாசாலை பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெப்பை தலைமையில் நடைபெற்ற சந்திப்பில் இலங்கை குடும்ப திட்ட சங்க தலைவி பெமிலா சேனநாயக்க வைத்திய நிபுணர் கே.கடம்பநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேவேளை பிரித்தானிய பாராளுமன்ற குழுவினரால் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு நிதி உதவிகள் வழங்கப்படவுள்ளதாக இப்றாலெப்பை தெரிவித்தார். மேலும் பிரித்தானிய பாராளுமன்ற குழு நேற்று திருகோணமலையில் உள்ள சனத்தொகை சேவைகள் லங்காவின் மருத்துவ சிகிச்சை நிலையத்துக்கு விஜயம் செய்திருந்தனர்.