மழையின் பாதிப்பு தொடர்கிறது-

rain llநிலவுகின்ற மழையுடனான காலநிலை காரணமாக, நாட்டின் 9 மாவட்டங்களைச் சேர்ந்த 23 ஆயிரத்து 5719 குடும்பங்களைச் சேர்ந்த 70 ஆயிரத்து 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலயம் இதனைத் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மாத்தளை, திருகோணமலை, கம்பஹா, புத்தளம், நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் ஆயிரத்து 210 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 554 பேர் இடர்பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். வடமாகாணத்தில் மாத்திரம் அனர்த்த நிலைமை காரணமாக 11 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. புத்தளம் மாவட்டத்தில் ஆயிரத்து 421குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தின் பல பாதைகளும் நீரில் மூழ்கி இருக்கின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக குருக்கள் மடத்தில் நீர்வழிப் படகுப்பாதை பயணிகள் தங்குமடம் இடிந்து விழுந்து ஒருவர் காயமடைந்துள்ளதுடன் கட்டிடம் முற்றாக சேதமடைந்துள்ளது. இதேவேளை, அதிக மழையுடனான காலநிலை காரணமாக, நாட்டில் உள்ள 22 நீர்த்தேக்கங்களின் அவசர கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர் வடிகாலமைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் என்று காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் நாட்டுக்கு அருகில் ஏற்பட்டிருந்த தாழமுக்க நிலை எதிர்வரும் 24 மணித்தியாலத்துக்குள் தமிழ் நாட்டை நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.