பயங்கரவாதத் தடை சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டம்-

law helpபயங்கரவாதச் தடைச் சட்டத்துக்குப் பதிலாக, அமெரிக்காவின் தேசப்பற்றுச் சட்டத்தை மாதிரியாகக் கொண்ட புதிய சட்டமொன்றைக் கொண்டுவர, அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலிகளின் பயங்கரவாதத்தைக் கையாள்வதற்கான ஆயுதமாக பயங்கரவாதத் தடைச்சட்டம், அப்போது பயன்படுத்தப்பட்டது. யுத்தம் முடிந்த பின்பு இந்த சட்டத்தைத் தொடர்ந்து வைத்திருப்பது விமர்சனத்துக்குள்ளானது. ஐ.நா மனித உரிமைகள் பேரவை, இலங்கை மீது நிறைவேற்றிய தீர்மானமும் இச் சட்டத்தை நீக்கக் கோருகின்றது. வெளிவிவகார அமைச்சு, நீதியமைச்சு, சட்ட வரைஞர் திணைக்களம் ஆகியன, பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலான புதிய சட்டத்தை வரைந்து வருவதாக தெரிவித்துள்ளன. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், எந்தவொரு பயங்கரவாதத்தையும் எதிர்க்க சர்வதேச தரத்திலான சட்டமாக இது அமையும்.

தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்கிறது-

jailதமது விடுதலையை வலியுறுத்தி தமிழ் கைதிகள் 9 ஆவது நாளாக இன்றும் உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் கைதிகளில் நால்வர் சுகவீனமுற்ற நிலையில் நேற்று பிற்பகல் முதல் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹண புஷ்பகுமார குறிப்பிட்டார். பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் தமது விடுதலை தொடர்பில் இறுதியான தீர்மானம் எடுக்கப்படவேண்டுமென வலியுறுத்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எவ்வாறாயினும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகளில் 32 பேருக்கு கடந்த வாரம் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டிருந்தது. இவர்களில் 24 தமிழ் கைதிகள் பிணை நிபந்தனைகள் பூர்த்திசெய்யப்பட்ட பின்னர் உறவினர்களால் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். எஞ்சியுள்ளவர்களின் பிணை தொடர்பிலும் அவர்களின் உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்திருந்தார்.

ஐ.நா யாழ். கிளை அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்-

243444தமிழ் அரசியல் கைதிகளை விடுக்கக் கோரி இன்று யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள, ஐக்கிய நாடுகள் சபையின் கிளை அலுவகத்திற்கு முன்பாக கவனீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் முன்னணி மற்றும் மன்னார் மக்கள் பிரஜைகள் அமைப்பின் ஏற்பாட்டில், எட்டு அம்ச கோரிக்கைகளை வலியூறுத்தி இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும், அரசியல் கைதிகள் சிறைக்குள் நடாத்தும் உண்ணாவிதரப் போராட்டம் நியாயமானதே அவர்களை உடன் விடுதலை செய், உலகுக்கு நல்லாட்சி வேடம் தமிழருக்கு கொடுங்கோலாட்சியா, சிறைவாழ்வு தான் தமிழருக்கு நிரந்தரமா, சர்வதேசமே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

அரசியல் கைதிகள் எண்மர் பிணையில் செல்ல அனுமதி-

customsஅரசியல் கைதிகள் 8 பேரை இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது. ஒவ்வொருவருக்கும் தலா 10 லட்சம் ரூபா பெறுமதியான 2 சரீர பிணை வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக 216 அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். அவர்களுள் 24பேர் கடந்த வெள்ளிக்கிழமை பிணையில் சென்றுள்ளனர். அதேநேரம் 40 பேர் நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். எஞ்சியவர்கள் புனர்வாழ்வு செயற்பாட்டிற்கு உள்ளாக விருப்பம் தெரிவித்து கடிதத்தை கையளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, அவர்களை புனர்வாழ்வளிப்புக்கு உள்ளாக்கி விடுவிப்பது தொடர்பாக அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்திருந்தார்.