அசாதாரண காலநிலையால் மக்கள் பாதிப்பு-

rainவடக்கில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் நான்காயிரத்திற்கும் அதிகமானோர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை இராணுவத்தினரின் உதவியுடன் பாதுகாப்பான இடங்களுக்கு அகற்றி வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை கிளிநொச்சி சாந்திபுரம் பிரதேசத்தில் நேற்று இரவு வீசிய கடும் காற்றின் காரணமாக 20 வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில், குருநாகல் மாவட்டத்தில் அசாதாரண காலநிலை தொடர்கிறது. இதனால் இந்த மாவட்டத்தில் ஹிரிபிட்டிய, ஹிரியால போன்ற பிரதேசங்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. குருநாகலில் இருந்து ஹிரிப்பிட்டிய மற்றும் இப்பாகமுவ பகுதிகளுக்கு செல்லும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிக மழை வீழ்ச்சி காரணமாக தம்புள்ளை நகரின் கண்டலம வீதி, பஹல வாவி, உணபந்துரு யாய, இப்பன்கடுவ ஆகிய பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதன்போது ஆயிரத்து 500 குடும்பங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று காலை முதல் மதியம் 12 வரையிலான காலப்பகுதியினில், மன்னார் மாவட்டத்தில் 115.5 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. மன்னார் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இது தவிர, மன்னார் நகரில் உள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களும் வெள்ளத்தினால் பாதிப்படைந்துள்ளன. மன்னார் – யாழ்ப்பாணம் ஏ-32 பிரதான வீதியின் பாலியாற்று பகுதியில் உள்ள பாலத்தில் சுமார் 5 அடிக்கு மேலாக வெள்ள நீர் பெறுக்கெடுத்து ஓடுவதினால் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன குறித்த பாலத்தை கடக்க மக்கள் உழவு இயந்திரத்தை பயன்படுத்தி வருகின்றனர். வெள்ளங்குளம் பகுதியில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள கோவில் ஒன்றில் தஞ்சமடைந்துள்ளனர். இதேவேளை பாலியாறு பெருக்கெடுத்துள்ளமையால் பாலியாற்று பகுதியில் வாழ்ந்து வரும் 25 குடும்பங்களைச் சேர்ந்த 98 பேர் பாதிக்கப்பட்டு உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். சிலாபத்துறை – புத்தளம் பிரதான வீதியில் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளமையினால் இளவங்குளம் வீதியூடான போக்குவரத்துக்களும் பாதீப்படைந்துள்ளன. அனுராதபுரம் நாச்சியாதீவு குளத்தின் அனைத்து அணைக்கட்டுகளும் திறந்து விடப்பட்டுள்ளமையினால் மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் மடுக்கரை, அச்சங்குளம், இராசமடு ஆகிய கிராமங்களிலும் தற்பொது வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதேவேளை, ஹங்குரான்கெத்த உடவத்தை பிரதேசத்தில் பிரதான பாதையில் சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ரிகில்லகஸ்கட, பதியபெலெல்ல, வலப்பனை, ராகலை. ஆகிய பகுதிகளிலும் மலைப்பகுதியில் உள்ள கற்கள் பாதைகளில் உருண்டு வீழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, விக்டோரியோ, மற்றும் பொல்கொல்ல ஆகிய நீர்த்தேக்கங்களில் 10 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக அர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. அசாதாரண காலநிலை காரணமாக 10 மாவட்டங்களைச் சேர்ந்த 38ஆயிரத்து 19பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை. 7 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இலங்கைக்கு அருகில் வங்காளவிரிகுடாவில் ஏற்பட்டிருந்த தாழமுக்க பிரதேசம் வலுவிழந்து தமிழகத்தை நோக்கி நகர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அல்லது இரவில் இந்த தாழமுக்க பிரதேசம் தமிழகத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், மழை மற்றும் முகில் சூழ்ந்த காலநிலை தொடர்ந்தும் வடமாகாணத்திலும், தெற்கின் சில பகுதிகளிலும் நிலவும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. அத்துடன் நாடு முழுவதும் வலிமையான காற்று வீசுவதற்கான சாத்தியங்களும் தொடர்ந்து காணப்படுகின்றன. எனினும் இன்றைய தினத்துக்கு பின்னர் மழை வீழ்ச்சி குறைவடையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.