காலவரையறைக்கமைய சர்வகட்சி மாநாடு இடம்பெறும்-ஜனாதிபதி-

maithriநாட்டின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்குத் தீர்வு காணப்படவேண்டும் என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அடுத்த சர்வகட்சி மாநாடு, உரிய நிகழ்ச்சி நிரல் மற்றும் காலவரையறைக்கு அமைவாக இடம்பெறும் என்றும் தெரிவித்தார். சர்வகட்சி மாநாடு, இரண்டாவது முறையாக ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ‘ஜெனீவா யோசனைகள் தொடர்பில் எடுக்கப்படும் சகல நடவடிக்கைகளும், இலங்கை அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே அமையும்’ என்றும் அவர் கூறியுள்ளார். அடுத்த சர்வகட்சி மாநாடு, உரிய நிகழ்ச்சி நிரல் மற்றும் காலவரையறைக்கு அமைவாக இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை, சர்வகட்சி மாநாட்டின் முதலாவது கூட்டத்தில் அரசியல் கட்சிகளினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைகள் யாவும், மும்மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, சகல கட்சிகளுக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு, அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணித்தார். உண்மையைக் கண்டறியும் பொறிமுறை, நீதி வழங்கல் பொறிமுறை, மறுசீரமைத்தலுக்கான பொறிமுறை, இழப்பீடு வழங்குவதற்கான பொறிமுறை மற்றும் மீள பொறுப்பு தொடர்பான பொறிமுறையின் அடிப்படையில் கருத்துகளைக் கேட்டறிவதற்காக, நிபுணர் குழு பலவற்றை நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். சர்வகட்சி மாநாட்டின் முதலாவது கூட்டத்தில், கட்சிகளின் சார்பில் 12 யோசனைகள் முன்வைக்கப்பட்டன. சர்வகட்சி அரசியல் பிரதிநிதிகளின் சந்திப்பை, நடைமுறைச் சாத்தியமாக்குவதற்கு மிக மிகப்பொறுப்புடன் ஆராயப்படும் என்றும் அவர் கூறினார்.

விடுதலைக்காக அமையம் ஒன்றை உருவாக்கி போராடுமாறு வலியுறுத்து-

fgfgfggதமது விடுதலைக்காக வடக்கு மாகாண முதலமைச்சரையும் உள்ளடக்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சிவில் சமூக மனித உரிமை அமைப்புகள், சட்டவாளர்கள், சர்வ மதத்தலைவர்கள், புலம்பெயர் உறவுகள் ஒன்றுபட்டு, தமது விடுதலைக்காக ஒரு அமையம் ஒன்றை உருவாக்கி, குழுவாக சகல முயற்சிகளிலும் ஈடுபடவேண்டும் என்று அரசியல் கைதிகள் தெரிவித்தனர். நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் கடந்த 10 நாட்களாக சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவந்த அரசியல் கைதிகளின் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, அநுராதபுரம் சிறைச்சாலைக்கு நேற்றுக்காலை சென்று அரசியல் கைதிகளுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், சிவசக்தி ஆனந்தன்,சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் நீராகாரம் வழங்கியிருந்தனர். இதன்போதே அரசியல் கைதிகள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். இதேவேளை அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வளிப்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனால் விரைவில் இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். அரசியல் கைதிகளை பிணையில் விடுவிப்பது அல்லது புனர்வாழ்வுப் பயிற்சிகளுக்கு அனுப்புவது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவதானம் செலுத்தியுள்ளதாகவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார். அனுராதபுர சிறைகளிலுள்ள அரசியல் கைதிகளை சந்திப்பதற்குச் சென்ற வேளையே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.