ஐ.நா அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் இலங்கைக்கு விஜயம்-

samanthaஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவர், இன்றுபிற்பகல் இலங்கையை வந்தடைந்துள்ளார். மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருரகைதந்துள்ள அவர், அமெரிக்க மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். இதன்பொருட்டு ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், சிரேஷ்ட அதிகாரிகள், சிவில் சமூகத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். ஆசிய நாடுகளுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள சமந்தா பவர் இந்தியாவின் களநிலைமைகளை ஆராய்ந்துள்ளதுடன், இன்று இலங்கை வந்துள்ளார். அவர் இன்றிலிருந்து எதிர்வரும் 23ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து, அமெரிக்க மற்றும் இலங்கை இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். சமந்த பவர் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்யவுள்ளதுடன், அங்குள்ள உள்ளுர் ஊடகவியலாளர்களை சந்திக்கவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது. தமது யாழ். விஜயத்தின்போது, மோதல்களினால் சேதமடைந்த ஒஸ்மானியா கல்லூரியின் புதிய கட்டட திறப்புவிழாவில் சமந்தா பவர் கலந்துகொள்வதுடன், யாழ். நூலகத்தையும் நேரில்சென்று பார்வையிடவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீரியபெத்தையைச் சேர்ந்த 73 குடும்பங்களும் வேறிடத்திற்கு மாற்றம்-

meeriyabeddaபதுளை, கொஸ்லாந்தை மீரியாபெத்தையில் மண்சரிவு அபாயம் காரணமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்ட 73 குடும்பங்களைச் சேர்ந்த 390 பேரும் அம்பிட்டிகந்த தொழிற்சாலையில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீரியாபெத்தையில், கடந்த 19ஆம் திகதி 100 மில்லிமீற்றர் மழை பெய்தமையால், மேற்படி 73 குடும்பங்களும் உடன் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இது தொடர்பில் அரசாங்க செயலாளர் சிரோமி ஜீவமாலா தெரிவிக்கையில், மேற்படி 73 குடும்பங்களை சேர்ந்தவர்களும் அம்பிட்டிகந்த தொழிற்சாலையில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டுள்ளனர். அங்கு இடவசதி போதாமையினால் மாற்று இடமொன்றுக்கு அம்மக்களை குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான உலருணவு மற்றும் அடிப்படை உதவிகளையும் வழங்க பிரதேச செயலகத்தினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார். இதேவேளை, ‘தியகல தோட்டத்திலும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டிருப்பதனால் அங்கிருந்து சுமார் 60 குடும்பங்களை கொண்ட 300 பேர் பொது இடமொன்றில் தங்கவைக்கப்பட்டு உணவுப்பொருட்கள் வழங்கப்படுகின்றன.

பிரதி அமைச்சர் உள்ளிட்ட ஐவருக்கெதிராக வழக்கு-

sarath kumaraகடந்த ஜனாதிபதி தேர்தலின்போது இடம்பெற்ற அரசாங்க நிதி துஸ்பிரயோகம் தொடர்பில் முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளது. நீர்கொழும்பில் இடம்பெற்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பிரசார கூட்டம் ஒன்றுக்காக, அரசாங்க நிதியிலிருந்து 132 லட்சம் ரூபாய் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இக் குற்றச்சாட்டு தொடர்பில் பாரிய மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. அந்த விசாரணை ஆணைக்குழுவினால் முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார் குணரத்ன உள்ளிட்ட 20 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதனடிப்படையில் குறித்த ஐந்து பேருக்கு எதிராகவும் வழக்கு தொடருமாறு, சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கும், கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.நா அறிக்கை ஆராயப்படுகிறது-மெக்ஸ்வல் பரணகம-

maxwel paranagamaகாணாமல் போனோர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள முற்கூட்டிய அறிக்கையை ஆய்வு செய்து வருவதாக, காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த குழு கடந்த 9ம் திகதி முதல் 18ம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. இதன்போது யாழ்ப்பாணம், மன்னார் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு சென்று விசாரணைகளை நடத்தியதுடன், திருகோணமலையில் இரகசிய துன்புறுத்தல் முகாம் ஒன்று காணப்படுவதாகவும் கூறியிருந்தது. இவ் விடயங்களை கொண்டுள்ள அறிக்கையை தற்போது ஆய்வு செய்து வருவதாக மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார். அதேநேரம், ஐக்கிய நாடுகளின் செயற்குழு முன்னறிவிப்பு இன்றியே திருகோணமலை முகாமிற்கு சென்றிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

20 தமிழ் அரசியல் கைதிகளை புனர்வாழ்விற்கு அனுப்ப நடவடிக்கை-

jailபயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் 20 அரசியல் கைதிகள், புனர்வாழ்வளிப்பு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மீள்குடியேற்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் அமைச்சர் எம்.சுவாமிநாதனுக்கும், சட்ட மா அதிபருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி 20 அரசியல் கைதிகள் வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வளிப்பு நிலையத்துக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். அவர்களுக்கு மனவள ஆலோசனையும், தொழிற்சாலை பயிற்சிகளும் வழங்கப்படும் என்று மேலும் தெரிவிக்கப்படுகிறது.