இலங்கையர்களுக்கு பயண எச்சரிக்கை விடுப்பதில்லை-

foriegn ministryதீவிரவாத அச்சுறுத்தல்கள் காரணமாக இலங்கைப் பிரஜைகளை பிற நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என எந்தவொரு பயண எச்சரிக்கையும் விடுக்கப்போவதில்லை என, வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இது குறித்து வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு இன்று கருத்து வெளியிட்டுள்ள அமைச்சின் அதிகாரி, அண்மையில் தீவிரவாதிகளால் பாரிஸ் மற்றும் மாலி போன்ற நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் கூறினார். இலங்கைப் பிரஜைகள் விடுமுறைக் காலங்களில் எந்தவொரு நாட்டுக்கும் பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக தமது நாட்டு பிரஜைகளுக்கு நேற்று அமெரிக்கா உலக அளவில் பயண எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரியின் இக்கருத்து வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஏழு பொலிஸார் மாற்றம்-

policeபாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு 9 பொலிஸ் உத்தியோகத்தர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். நவம்பர் 16ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை ஆணைக்குழுவில் கடமையாற்றிய 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீண்டும் அவர்கள் சேவை செய்த இடத்திற்கே மாற்றப்பட்டுள்ளனர். ஆணைக்குழுவின் தலைவர் பொலிஸ் மா அதிபரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ருவன் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்குமாறு அமைச்சர்கள் கோரிக்கை-

rajithaதம் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு சில அமைச்சர்கள் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க மற்றும் அர்ஜூன ரணதுங்க ஆகியோரே இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எவன்காட் பிரதானி எனக் கூறப்படும் நிஸ்ஸங்க சேனாதிபதியிடம் அல்லது அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய எவரிடம் இருந்தும் தேர்தலுக்கான நிதி அல்லது இலஞ்சம் கோரவில்லை எனவும், இந்த விடயம் தொடர்பில் தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை விசாரணை செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரியுமே இவர்கள் இந்த கடித்தத்தை வழங்கியுள்ளனர்.

கனடாவில் இந்து கோயிலுக்கு எதிராக வழக்கு-

canadaகனடா டொரன்டோவில் அமைந்துள்ள கந்தசுவாமி கோயிலில் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடாவின் எல்லை பாதுகாப்பு பிரிவினர் பிராந்திய நீதிமன்றமொன்றில் தாக்கல் செய்திருந்த வழக்கு விசாரணை ஒன்றின் போதே இந்த தகவல் வெளியானதாக த நெஸனல் போஸ்ட் செய்தித் தாள் தெரிவித்துள்ளது. குறித்த கோயிலில் பணியாற்றிய அர்ச்சகர் ஒருவர் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என கூறி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்நது. இதன்போது குறித்த கோயில் கனடாவில் தடை செய்யப்பட்டுள்ள புலிகளின் ஆதரவு அமைப்பான உலகத்தமிழர் இயக்கத்தால் நிறுவகிக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு பிரிவினர் சுட்டிக்காட்டினர் எனினும் இதனை மறுத்துள்ள ஸ்காப்ரா கோயில்களின் பணிப்பாளர் தனபாலசிங்கம் குறித்த கோயிலுக்கு கனடாவில் தடை செய்யப்பட்டவர்கள் வந்து செல்வதால் அதனை அவர்களின் நிறுவகத்துக்கு உரியது என கூறுவது ஏற்க முடியாதென கூறியுள்ளார்.

தமிழ் கைதிகள் நீதிமன்றில் ஆஜர்: மூவர் புனர்வாழ்வு கோரிக்கை-

jailபயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பில் 5 தமிழ் கைதிகள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இரு வேறு வழக்குகளின் கீழ் 5 தமிழ் கைதிகளும் கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவர்களில் ஒருவருக்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட போதிலும் சந்தேகநபர் தொடர்பில், பதவிய நீதிமன்றத்தில் மற்றுமொரு வழக்கு காணப்படுவதால் அவர் விடுதலை செய்யப்படவில்லை. இதேவேளை, மற்றைய ஒருவரின் புனர்வாழ்வு கோரிக்கை நீதிமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏனைய மூன்று தமிழ் கைதிகளும் புனர்வாழ்வு பெறுவதற்கு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கமைய, தமிழ் கைதிகளின் கோரிக்கை குறித்த சட்டமா அதிபர் திணைக்களத்தின் நிலைப்பாடு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என கைதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி பொன்னுத்துரை கிரிஷாந்தன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட புதிய அரச அதிபர் கடமை பொறுப்பேற்பு-

ga vavuniyaவவுனியா மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக ரோஹன புஸ்பகுமார இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பதவி ஏற்பு நிகழ்வில் முன்னாள் அரசாங்க அதிபரும் கலந்து கொண்டிருந்தார். புதிய மற்றும் முன்னாள் அரசாங்க அதிபர்கள் வைபவ ரீதியாக அழைத்து வரப்பட்டதுடன் சர்வமத பிரார்த்தனைகளின் பின்னர் முன்னாள் அரச அதிபர் பந்துல ஹரிச்சந்திர பொறுப்புகளை புதிய அரசாங்க அதிபரிடம் உத்தியோகப்பூர்வமாக ஒப்படைத்தார். இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு புதிய அரசாங்க அதிபரை வரவேற்றனர். ரோஹண புஷ்பகுமார சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக இருந்து வவுனியாவிற்கான புதிய மாவட்ட அரசாங்க அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் வெற்றிடம் ஏற்பட்டுள்ள சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பதவிக்கு நிஷாந்த தனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.