மாரீசன்கூடல் சுப்பிரமணியம் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா-(படங்கள் இணைப்பு)
யாழ். மாரீசன்கூடல் சுப்பிரமணியம் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலையின் அதிபர் திரு. மணிவண்ணன் அவர்களது தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக சண்டிலிப்பாய் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி நிரஞ்சலா அவர்களும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வின்போது பாடசாலைப் பிள்ளைகளின் பல்வேறு கலைநிகழ்வுகளும், அதனைத் தொடர்ந்து பரிசளிப்பும் இடம்பெற்றது.
இங்கு உரைநிகழ்த்திய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், மாரீசன்கூடல் என்பது ஒரு மிகவும் பின்தங்கிய கிராமமாகும். வறுமைக்கோட்டின் கீழுள்ள குடும்பங்களைச் சார்ந்த பிள்ளைகளே கூடுதலாக இக்கிராமப் பாடசாலைகளில் கல்வி கற்கின்றனர். அவ்வாறான ஒரு பாடசாலையில் இருந்து ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் பிள்ளைகளில் சிலர் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியடையாமைக்கு முக்கிய காரணம் யாதெனில் அந்தப் பிள்ளைகளுக்கு பரீட்சைக்கான கேள்விகளை வாசித்து கிரகித்து அதனை விளங்கிக் கொள்ளும் அறிவு போதாமல் இருக்கின்றமையே என்பதை பல கல்வியதிகாரிகள் என்னிடம் கூறியிருக்கின்றார்கள் என்பதுடன், பல பாடசாலைகளுக்குச் செல்வதால் என்னாலும் அதை அவதானிக்கக் கூடியதாகவிருக்கின்றது.
ஆகவே, இந்தப் பிள்ளைகளின் கல்வியை உயர்த்த வேண்டுமென்று நாங்கள் கூறுவது, முக்கியமாக அந்தப் பிள்ளைகள் கல்விகற்று ஒரு நல்ல நிலைமைக்கு வருவது மாத்திரமல்ல, அவ்வாறான நிலைமைக்கு வராத பிள்ளைகளும்கூட வாசித்து எழுத மற்றும் விளங்கிக் கொள்ளக்கூடிய ஒரு அடிப்படை அறிவைத்தன்னும் பெறவேண்டும் என்பதற்கே. ஆகவே இதுபோன்ற பிற்படுத்தப்பட்ட கிராமங்களில் இருக்கக்கூடிய பாடசாலைகள் அந்தப் பிள்ளைகளுக்கு ஆகக் குறைந்தது வாசிக்க எழுதக்கூடிய அறிவைப் புகட்ட வேண்டும். இதனை ஒவ்வொரு பாடசாலை ஆசிரியர்களும் கவனத்தில் எடுத்து அந்தப் பி;ள்ளைகளின் கல்வி நிலையை உயர்த்துவது அவர்களது கடமையாகும். இதை அவர்கள் கட்டாயமாக செய்யவேண்டும். அதற்குத் தேவையான வசதிகள் உதவிகளை நாங்கள் செய்வதற்கு தயாராகவே இருக்கின்றோம் என்று கூறினார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர், அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் நலன்விரும்பிகளும் கலந்துகொண்டிருந்தனர்.