அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ் மாணவன் உயிர்த்தியாகம்-

suicide (1)நல்லாட்சி அரசாங்கத்திடம் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி உயர்தரத்தில் கற்கும் மாணவர் ஒருவர் கடிதம் ஒன்றை எழுதிவிட்டு இன்று ஓடும் புகையிரதம் முன் பாயந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். கோப்பாய் வடக்கு கோப்பாய் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் செந்தூரன் (வயது 18) என்ற மாணவனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்றுகாலை யாழ்.கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் காங்கேசன்துறையில் இருந்து யாழ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த புகையிரத வண்டிக்கு முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த மாணவனின் சடலத்துடன், தற்கொலைக்கு முன் எழுதியுள்ள கடிதத்தினையும் கோப்பாய் பொலிஸார் மீட்டுள்ளனர். அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

விடுதலையை கொடு ஒளியையூட்டு,
அதிமேதகு ஜனாதிபதி நல்லாட்சி அரசாங்கங்கள் அனைத்து அரசியல் கைதிகளையும் புனர்வாழ்வு அளித்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஒரு அரசியல் கைதியேனும் சிறையில் இருக்க முடியாது. இந்த அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்ய வேண்டியதன் அவசியம் எனக்குப் புரிந்தும் கூட இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு இன்னும் புரியவில்லையே என்பது வருத்தமளிக்கின்றது. என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் குறித்த மாணவனின் சுயவிபரமும் எழுதப்பட்டுள்ளது. சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.