தமிழ் கைதிகளின் நிலை தொடர்பில் பிரித்தானியா அவதானம்-

britishஇலங்கையில் தற்போது சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கை தமிழ் கைதிகள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரினால் இந்த கருத்து தெரிவிக்கப்பட்தாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. தமிழ் கைதிகளினால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதம் டிசம்பர் 15ம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பில் தாம் இலங்கை அரசுடன் கலந்துரையாடி வருவதாகவும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் ஜெனிவாவில் கடந்த செப்டம்பர் மாதம் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் உரை தொடர்பில் தாம் திருப்தியடைவதாகவும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார். இலங்கையில் காணப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றியமைத்து சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு அமைய இது தொடர்பான சட்டமூலத்தை உருவாக்குமாறும் இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்கபட்டுள்ளதாக பிரித்தானி வெளிவிவகார அமைச்சர் அந்நாட்டு பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைய மனித உரிமைகள் விடயத்தில் இலங்கை செயற்படுவதற்கு பிரித்தானியா ஒத்துழைக்கும் எனவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.